மின்கம்பங்களில் சீரமைப்பு பணி தீவிரம்
தினத்தந்தி செய்தி எதிரொலியாக இடையக்கோட்டையில் மின்கம்பங்களில் சீரமைப்பு பணி தீவிரமாக நடக்கிறது.
ஒட்டன்சத்திரம் அருகே இடையக்கோட்டை மற்றும் அதனைச்சுற்றியுள்ள கிராமப்பகுதிகளில் கடந்த ஒரு வாரமாக லேசான மழை பெய்தால் கூட இரவு நேரங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் முதல் வயதானவர்கள் வரை தூக்கமின்றி அவதிப்பட்டு வந்தனர். இது குறித்த செய்தி 'தினத்தந்தி'யில் நேற்று பிரசுரமானது. இதன் எதிரொலியாக சின்னக்காம்பட்டி துணை மின்நிலைய உதவி செயற்பொறியாளர் ராஜேந்திரன், இடையக்கோட்டை உதவி மின் பொறியாளர் சீனிவாசன் ஆகியோர் தலைமையிலான மின்சார வாரிய ஊழியர்கள் மின்கம்பங்களில் சீரமைப்பு பணிகளில் தற்போது தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். மின்வெட்டு பிரச்சினைக்கு உடனடி தீர்வு கொடுத்த 'தினத்தந்தி'க்கும், நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் பாராட்டுகளை தெரிவித்தனர்.