கோரைப்புல் அறுவடை பணி தீவிரம்
பொறையாறு அருகே கோரைப்புல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிளாஸ்டிக் பாய் வரவால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
பொறையாறு:
பொறையாறு அருகே கோரைப்புல் அறுவடை பணி தீவிரமாக நடந்து வருகிறது. பிளாஸ்டிக் பாய் வரவால் வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்குவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.
விவசாய தொழில்
மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுகா பகுதியில் விவசாய தொழிலுக்கு அடுத்தப்படியாக மீன்பிடி தொழிலும் முக்கிய தொழிலாக உள்ளது. பொறையாறு அருகே நல்லாடை, திருவிளையாட்டம், காழியப்பநல்லூர், மாணிக்கப்பங்கு, காளகஸ்திநாதபுரம், மருதம்பள்ளம், செம்பனார்கோவில், பரசலூர், கீழையூர், கிடாரங்கொண்டான், கஞ்சாநகரம், ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் நெல், கரும்பு, உளுந்து, பாசிபயறு, வாழை, செங்கரும்பு, சீனிக்கரும்பு, எள், சோளம், கம்பு, மரவள்ளிக்கிழங்கு, சக்கரவள்ளி கிழங்கு, நிலக்கடலை, கேழ்வரகு, கத்தரி, வெண்டை, புடலை, பகற்காய், தக்காளி, கீரை வகைகள் சூரியகாந்தி உள்ளிட்டவைகளை அந்ததந்த பகுதி விளைச்சலுக்கு எற்றதுபோல் சாகுபடி செய்து வருகின்றனர்.
கோரைப்புல் சாகுபடி
இந்த நிலையில் பொறையாறு அருகே செம்பனார்கோவில், காளகஸ்திநாதபுரம், திருவிளையாட்டம், திருவிடைக்கழி ஆகிய கிராமங்களை சேர்ந்த விவசாயிகள் பாய் தயாரிக்கும் கோரைப்புல் சாகுபடி செய்து வருகின்றனர். தற்போது நல்லாடை பகுதி விவசாயிகள் கோரைப்புல் அறுவடை செய்யும் பணியில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இதுகுறித்து அந்த பகுதியை சேர்ந்த கோரைப்புல் சாகுபடி செய்யும் விவசாயிகள் கூறியதாவது:- செம்பனார்கோவில் வட்டார பகுதியை சேர்ந்த சில விவசாயிகள் பாய் தயாரிக்க உதவும் கோரைப்புல் சாகுபடி செய்து வருகிறோம். தற்போது அறுவடை பணி தொடங்கி உள்ளோம்.
பிளாஸ்டிக் பாய் வரவால் நஷ்டம்
கோரைப்புல்லை வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், ஆரணி, கரூர், கயத்தாறு பகுதியை சேர்ந்த வியாபாரிகள் இங்கு வந்து கோரைப்புல்லை கொள்முதல் செய்து செல்கின்றனர். இந்த கோரைப்புல் மூலம் பாய் தயாரித்து விற்பனை செய்கின்றனர்.
கோரைப்பாயால் மனிதர்களுக்கு பலவித நன்மைகள் ஏற்படுகிறது. உடல் உஷ்ணத்தை குறைக்கிறது, நோய்களில் இருந்து பாதுகாக்கிறது. இந்த நிலையில் பொதுமக்கள் கோரைப்பாய் வாங்காமல் பிளாஸ்டிக் பாயை வாங்கி செல்கின்றனர். இதனால் வியாபாரிகள் கோரைப்புல்லை குறைந்த விலைக்கு வாங்கி செல்லாததால் நஷ்டம் ஏற்படுவதாக விவசாயிகள் வேதனை அடைந்து வருகின்றனர்.
2 முறை அறுவடை
கோரைப்புல்லை ஆண்டுக்கு 2 முறை அறுவடை செய்வோம். 1 ஏக்கருக்கு ரூ.25 ஆயிரம் முதல் ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்கிறோம். கோரை அறுவடை செய்யும் போது ஆள்கூலி மற்றும் பராமரிப்பு உள்ளிட்ட செலவுகளுக்கு போக குறைந்த வருமானம் கிடைக்கிறது.
வேறு தொழில் தெரியாததால் வழக்கம்போல் கோரை புல் சாகுபடியை தலைமுறை, தலைமுறையாக செய்து வருகிறோம் என்றார்.