ஏரிக்கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரம்

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

Update: 2022-11-11 18:13 GMT

திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏரிக்கால்வாய்கள் தூர்வாரும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது என மாவட்ட கண்காணிப்பு அலுவலர் கூறினார்.

பேட்டி

திருப்பத்தூர் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் மற்றும் அரசு கூடுதல் தலைமைச் செயலாள தென்காசி எஸ்.ஜவஹர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர் கூறியதாவது:-

நவம்பர் முதல் டிசம்பர் வரை மழைக்காலம் என்பதால் பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் அவர்களின் பொருட்கள் பாதுகாப்பது குறித்து நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் கடந்த 6 மாதங்களாக ஏரிக்கு செல்லும் கால்வாய்கள் மற்றும் ஏரியிலிருந்து தண்ணீர் வெளியே செல்லும் கால்வாய்களிலும் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கடந்த ஆண்டு 38 இடங்களில் தண்ணீர் தேங்கிய நிலை இருந்தது. தற்போது அது 7 இடங்களாக குறைக்கப்பட்டுள்ளது. இந்த 7 தண்ணீர் குறைவாகதான் தேங்கி உள்ளது. அப்படி தேங்கும் நிலை இருந்தால் தண்ணீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அரசு மருத்துவமனைகளை பொதுமக்கள், ஏழை எளிய மக்கள் அனைவரும் வந்து சிகிச்சை பெறும் இடம் ஆகும், திருப்பத்தூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு மேற்கொண்டு, அங்கு பணிபுரியும் மருத்துவர்கள், புற நோயாளிகள் இடம் குறைகள், நிறைகளை கேட்டு அறிந்தேன். அரசு மருத்துவமனையில் நோயாளிகளின் விவரங்கள் சேகரிக்கக்கூடிய புதிய கணினி வெர்ஷன் விரைவில் கொண்டுவரப்பட உள்ளது. வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கடந்த ஆண்டு மழை தண்ணீர் தேங்கி இருந்தது நடப்பாண்டில் அங்கு இருக்கும் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

விரைவில் பணிகள் முடிக்கப்பட்டு தண்ணீர் தேங்காமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

திருப்பத்தூர் மாவட்டம் தமிழ்நாட்டில் இ-ஆபிஸ் செயல்பாட்டில் 2-ஆம் இடத்திலும், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை செயல்படுத்தியதில் மாநிலத்தில் முதல் இடத்திலும் உள்ளது. ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் வளர்ச்சி திட்டங்களை செயல்படுத்துவதில் மாநில அளவில் 15-வது இடத்திலும், மேலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை செயல்படுத்துவதில் முதல் இடத்தை பிடித்துள்ளது. பொதுமக்களுக்கு எவ்வளவு சிறப்பாக சேவை செய்ய முடியுமோ தமிழ்நாடு அரசின் திட்டமிடல்படி செயல்பட அனைத்து முயற்சிகளும் எடுக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கலெக்டர் அமர்குஷ்வாஹா உடனிருந்தார்.

பேரிடர் கால ஒத்திகை

முன்னதாக திருப்பத்தூர் மேரி இமாக்குலேட் மேல்நிலைப்பள்ளியில் தேசிய பேரிடர் மீட்பு குழுவின் சார்பில் நடத்தப்பட்ட பேரிடர் கால ஒத்திகை பயிற்சியை கண்காணிப்பு அலுவலர் ஜவஹர், கலெக்டர் அமர்குஷ்வாஹா ஆகியோர் பார்வையிட்டு, மரக்கன்றை நட்டு வைத்தனர். அதைத் தொடர்ந்து திருப்பத்தூர் அரசு மருத்துவமனை, தாலுகா அலுவலகத்தையும் பார்வையிட்டார்.

நிகழ்ச்சியின்போது மாவட்ட வருவாய் அலுவலர் இ.வளர்மதி, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் செல்வராசு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் சரஸ்வதி, மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து, தேசிய பேரிடர் மீட்பு குழு கமாண்ர் அர்ஜுன் பால் ராஜ்புத், அண்ணாமலை சுவாமி, தாசில்தார்கள் (பேரிடர் மேலாண்மை) பிரியா, சிவப்பிரகாசம், உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்