தீவிரமடைகிறது என்.எல்.சி. நிலம் எடுப்பு பிரச்சினை: கலெக்டரை கிராமத்துக்குள் விடாமல் தடுத்து நிறுத்திய மக்கள் சேத்தியாத்தோப்பு அருகே பரபரப்பு

என்.எல்.சி. நிலம் எடுப்பு பிரச்சினை தற்போது தீவிரமடைந்துள்ளது. இது தொடர்பாக நிலத்தை பார்வையிட வந்த கலெக்டரை கிராமத்துக்குள் நுழைய விடாமல் பொதுமக்கள் தடுத்ததால் பரபரப்பு நிலவியது.

Update: 2022-11-05 19:36 GMT

சேத்தியாத்தோப்பு, 

கடலூா் மாவட்டம் நெய்வேலியில் இயங்கி வரும் என்.எல்.சி. இந்தியா நிறுவனம், நிலக்கரி சுரங்க விரிவாக்க பணி மேற்கொள்வதற்காக நிலம் கையகப்படுத்தும் பணியை மேற்கொண்டு வருகிறது.

இதில், 2-வது சுரங்கம் விரிவாக்க பணிக்காக, சேத்தியாத்தோப்பு அருகே கத்தாழை ஊராட்சியில் உள்ள கரிவெட்டி கிராமத்தில் விவசாய நிலம் மற்றும் வீடுகள் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

ஆனால், அந்த கிராம மக்கள் உரிய இழப்பீடு வழங்குதல், நிரந்தர தன்மையுள்ள வேலை வாய்ப்பு வழங்க வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். ஆனால் இதுநாள் வரைக்கும் அவர்களது கோரிக்கைகள் நிர்வாகத்தால் நிறைவேற்றப்படவில்லை. இதனால் மக்கள் கிராமத்தை விட்டு வெளியேற மறுத்து வருகின்றனர்.

கலெக்டரை தடுத்து நிறுத்தினர்

இந்த நிலையில் கையகப் படுத்தப்பட்ட இடத்தை பார்வையிடுவதற்காக நேற்று மதியம் 1 மணிக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் கரிவெட்டி கிராமத்துக்கு வந்தார்.

அவருடன் சிதம்பரம் சப்-கலெக்டர் (பொறுப்பு) ரவி, என்.எல்.சி. அதிகாரிகள், நில எடுப்பு தாசில்தார்கள் சத்யன், உலகளந்தன், புவனகிரி தாசில்தார் ரம்யா, வருவாய் ஆய்வாளர் ஜான் பிரிட்டோ, சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு ரூபன் குமார் மற்றும் ஏராளமான போலீசாரும் வந்தனர்.

இதுபற்றி அறிந்த கிராமத்தை சேர்ந்த 100-க்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் ஆண்கள், கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகளை கிராமத்துக்குள் விடாமல், நுழைவு பகுதியில் தடுத்து நிறுத்தினர். காரை விட்டு இறங்கி வந்த கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை அவர்கள் முற்றுகையிட்டனர். இதனால் பரபரப்பு நிலவியது.

வாக்குவாதம்

தொடர்ந்து கலெக்டர், கிராம மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது, கிராம மக்கள் தரப்பில் தங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், நிரந்தர தன்மையுடைய வேலையும் வழங்கிட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

அதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். ஆனால் அதை ஏற்க கிராம மக்கள் மறுத்துவிட்டனர். ஒவ்வொரு முறையும் இங்கு அதிகாரிகள் வரும் போதெல்லாம் இதுபோன்று தான் பதிலளிக்கிறார்கள்.

ஆனால் நடவடிக்கை ஏதும் இ்ல்லை. உங்களை போன்று நாங்கள் 5-க்கும் மேற்பட்ட கலெக்டரை பார்த்துவிட்டோம். அவர்களும் இதே பதில்தான் அளித்தார்கள் என்று தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

திரும்பி சென்ற கலெக்டர்

இதற்கிடையே சம்பவ இடத்துக்கு புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ. அருண்மொழிதேவன், பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் செல்வ மகேஷ், தமிழக வாழ்வுரிமை கட்சி மாவட்ட செயலாளர் சேரலாதன் உள்பட பலர் அங்கு வந்து, கலெக்டரிடம், மக்களின் கோரிக்கைகள் குறித்து பேசினர். இதையடுத்து கலெக்டர் பாலசுப்பிரமணியம் மற்றும் அதிகாரிகள் அங்கிருந்து புறப்பட்டனர். பின்னர் கிராம மக்களும் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

இதுகுறித்து, அருண்மொழிதேவன் எம்.எல்.ஏ. கூறுகையில், இந்த பகுதியில் நிலவும் இப்பிரச்சினை தொடர்பாக, சட்டசபையில் நான் பேசிய போது, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் மற்றும் அதிகாரிகளை கொண்டு குழு அமைத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார். ஆனால் இன்று வரை அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படவில்லை. வாழ்வாதாரத்தை இழந்து இருக்கும் இவர்களுக்கு, உரிய நிவாரணம் வழங்க வேண்டும், வீட்டிற்கு ஒருவருக்கு வேலை வழங்க வேண்டும் என்றார்.

அடுத்தடுத்து சம்பவம்

ஏற்கனவே நேற்று மந்தாரக்குப்பம் அருகே கலெக்டர் பாலசுப்பிரமணியத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். அதை தொடர்ந்து கரிவெட்டி கிராமத்திலும் அதேபோன்ற சம்பவம் நடந்து இருப்பதால், என்.எல்.சி. நில எடுப்பு தொடர்பான பிரச்சினை தீவிரம் அடைந்துள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்