பெரியகுளம் கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி தீவிரம்

சிவகாசி பெரிய குளம் கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

Update: 2022-11-24 19:16 GMT

சிவகாசி, 

சிவகாசி பெரிய குளம் கண்மாய் கரையை பலப்படுத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

பெரியகுளம் கண்மாய்

சிவகாசி மாநகராட்சி அருகில் பெரியகுளம் கண்மாய் உள்ளது. சிவகாசியின் முக்கிய நீர் ஆதாரமான இந்த கண்மாயை கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்னர் சிவகாசி பசுமை மன்றம் மீட்டு எடுத்து பராமரிப்பு பணிகளை செய்தது. அதன் பயனாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் பெய்த கனமழையின் போது கண்மாய் நிறைந்தது.

இந்த நிலையில் பசுமை மன்றம் தற்போது கண்மாய் கரைகளை பலப்படுத்தும் பணிகளை தீவிரமாக செய்து வருகிறது. சுமார் 1 கிலோ மீட்டர் தூரம் உள்ள இந்த பகுதியை கடந்த சில நாட்களாக பசுமை மன்றத்தினர் கண்மாயில் உள்ள மண்ணை எடுத்து கரைகளை பலப்படுத்தி வருகிறார்கள்.

கரையை பலப்படுத்தும் பணி

இதுகுறித்து பசுமை மன்ற நிர்வாகி ரவி கூறியதாவது, பெரியகுளம் கண்மாய் கரை சுமார் 1 கிலோ மீட்டர் நீளம் கொண்டது.

இதை சுத்தப்படுத்தி மியாவாக்கி ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

அவ்வாறு ஏற்படுத்தினால் இந்த பகுதியில் 2,500 மரங்களை ஒரே இடத்தில் வளர்க்க முடியும். இதே போல் கண்மாயின் 2 பக்கத்திலும் மியா வாக்கி அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

கண்மாய் கரையை பலப்படுத்தும் பணிகள் நடந்து வரும் நிலையில் கண்மாய் கரைகளில் மின்கம்பங்களும் இருக்கிறது.

இந்த மின் கம்பங்கள் கரையை உயர்த்தவும், அகலப்படுத்தவும் பெரும் இடையூறாக உள்ளது.

எனவே சாலையை கடந்து கண்மாய் கரையில் வைக்கப்பட்டுள்ள மின் கம்பங்களை அகற்றி குடியிருப்பு பகுதியில் மாற்றி வைத்தால் அந்த பகுதியில் கனரக வாகனங்கள் எளிதில் கடந்து செல்ல வாய்ப்பு ஏற்படும் என்று அப்பகுதி மக்கள் கூறுகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்