நீலகிரி-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரம்

தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? என்று நீலகிரி-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

Update: 2023-02-10 18:45 GMT

கூடலூர்

தடை செய்யப்பட்ட பொருட்கள் கடத்தி வரப்படுகிறதா? என்று நீலகிரி-கேரள எல்லையில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.

புகையிலை பொருட்கள்

தமிழகம், கர்நாடகா, கேரளா என 3 மாநிலங்கள் இணையும் கூடலூர் வழியாக ஏராளமான வாகனங்கள் வந்து செல்கிறது. குறிப்பாக கர்நாடகாவில் இருந்து கூடலூர் வழியாக கேரளாவுக்கு அத்தியாவசிய பொருட்களை கொண்டு செல்லும் சரக்கு லாரிகள் அதிகளவில் இயக்கப்படுகிறது. இதை பயன்படுத்தி சில வாகன டிரைவர்கள் அத்தியாவசிய பொருட்களுடன் தடை செய்யப்பட்ட குட்கா உள்ளிட்ட புகையிலை பொருட்களை கடத்தி வருகின்றனர். இதையொட்டி மாநில எல்லையில் போலீசார் கண்காணிப்பு பணி மேற்கொண்டு கடத்தல்காரர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

குட்கா பாக்கெட்டுகள்

இந்த நிலையில் கடந்த வாரம் வழக்கத்துக்கு மாறாக கேரளாவில் இருந்து எம்.சாண்ட் ஏற்றி கொண்டு வரும் ஒரு லாரியில் குட்கா பாக்கெட்டுகள் கடத்துவதாக கூடலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து கோழிபாலம் என்ற இடத்தில் போலீசார் குறிப்பிட்ட லாரியை தடுத்து நிறுத்தி சோதனை செய்தனர். அப்போது ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனர். பின்னர் டிரைவர், கிளீனர் உள்பட 2 பேரை கைது செய்தனர். தொடர்ந்து லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.

தீவிர சோதனை

இதைத்தொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பிரபாகர், கூடலூர் பகுதியில் உள்ள மாநில எல்லைகளில் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய உத்தரவிட்டார். இதனால் நாடுகாணி, பாட்டவயல், சோலாடி உள்பட மாநில எல்லைகளில் அனைத்து சோதனை சாவடிகளிலும் போலீசார் கேரளாவில் இருந்து வரும் அனைத்து வாகனங்களையும் தீவிர சோதனை செய்து வருகின்றனர். மேலும் டிரைவர்களிடம் வாகனங்கள் செல்லும் இடங்களை விசாரணை செய்து பதிவேடுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்