வடசேரியில் ரூ.65 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம்

நாகர்கோவில் வடசேரியில் ரூ.65 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்றும் கனகமூலம் சந்தை அண்ணா பஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலின் போது மேயர் மகேஷ் தெரிவித்தார்.

Update: 2023-03-31 19:13 GMT

நாகர்கோவில்,

நாகர்கோவில் வடசேரியில் ரூ.65 கோடியில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் கட்டப்படும் என்றும் கனகமூலம் சந்தை அண்ணா பஸ் நிலையத்துக்கு மாற்றப்படும் எனவும் பட்ஜெட் தாக்கலின் போது மேயர் மகேஷ் தெரிவித்தார்.

ஒருங்கிணைந்த பஸ் நிலையம்

நாகர்கோவில் மாநகர 2023-24 நிதியாண்டுக்கான பட்ஜெட் தாக்கல் கூட்டம் நேற்று மாநகராட்சி அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்தில் நாகர்கோவிலில் புதிதாக ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைப்பது தொடர்பாக கேள்விகள் எழுந்தன.

இதுகுறித்து மேயர் மகேஷ் கூறியதாவது:-

நாகர்கோவில் மாநகரில் சாலைகள் மேம்பாட்டிற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தற்போது ரூ.30 கோடி செலவில் சாலை சீரமைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நாகர்கோவில் மாநகர பகுதிக்கு ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இதனால் பஸ் நிலையங்களை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் நாகர்கோவில் அண்ணா பஸ் நிலையம், வடசேரி கிறிஸ்டோபர் பஸ் நிலையம் மற்றும் ஆம்னி பஸ் நிலையம் ஆகியவற்றை ஒன்றிணைக்கும் வகையில் ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்கப்படும்.

இந்த ஆண்டு ஒருங்கிணைந்த பஸ் நிலையம் அமைக்க திட்டமிட்டு வடசேரி பஸ் நிலையத்தை மையமாகக் கொண்டு அமைக்கப்படுகிறது. இதனால் அருகில் உள்ள கனகமூலம் சந்தை அண்ணா பஸ் நிலையத்திற்கு மாற்றம் செய்யப்படும். பின்னர் சந்தை இருந்த இடத்தில் நகர பஸ் நிலையமும், ஆம்னி பஸ் நிலையம் கொண்டு வரப்படும். அதனுடன் புறநகர் பஸ்நிலையம் இணைக்கப்படும்.இந்த ஒருங்கிணைந்த புதிய பஸ் நிலையம் அமைக்க ரூ.65 கோடி செலவில் திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை இந்த ஆண்டு நிறைவேற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்