கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து ஆய்வு
கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
கொடைக்கானல் கீழ்மலைப்பகுதியில் உள்ள வனப்பகுதிகள் மற்றும் ஏராளமான தனியார் தோட்டங்களில் மின்கம்பிகள் தாழ்வாக செல்கின்றன. இதனால் மின் விபத்து ஏற்பட்டு உயிர்பலி ஏற்படுகிறது. இதனை தடுக்கும் வகையில் மண்டல வன பாதுகாவலர் பத்மா உத்தரவின்பேரில், திண்டுக்கல் மாவட்ட வன அலுவலர் கிரண், அறிவுரையின்படி கன்னிவாடி வனச்சரகர் ஆறுமுகம் தலைமையில் மின்வாரிய அலுவலர்கள் மற்றும் வனப்பணியாளர்கள் இணைந்து கன்னிவாடி வன சரகத்துக்குட்பட்ட கொடைக்கானல் கீழ்மலை கிராமங்களான பன்றிமலை, சோலைக்காடு, ஆடலூர், கே.சி.பட்டி, பெரியூர் மற்றும் குப்பம்மாள்பட்டி ஆகிய பகுதிகளில் யானை நடமாட்டம் அதிகம் உள்ள பகுதிகளில் தாழ்வாக செல்லும் மின்கம்பிகள் குறித்து ஆய்வு செய்தனர். அத்துடன் சோலார் மின்வேலிகள் எவ்வாறு அமைக்கப்பட்டுள்ளது என்பது குறித்தும் விவசாயிகளிடம் விசாரணை நடத்தினர்.
இதுதவிர தாழ்வாக தொங்கிக்கொண்டிருக்கும் மின்கம்பிகளை சீரமைப்பது, மின்கம்பிகளில் கொக்கிகள் அமைத்து சோலார் மின்வேலிக்கு மின்சாரத்தை திருடுவது குறித்து ஆலோசனை நடத்தினர். அப்போது மின் திருட்டில் ஈடுபடுவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
இதேபோல் வத்தலக்குண்டு வனச்சரகர் ராம்குமார் தலைமையில் தாண்டிக்குடி, மங்களம்கொம்பு, தடியன்குடிசை, பெரும்பாறை, கொங்கப்பட்டி, மஞ்சள்பரப்பு, புல்லாவெளி உள்ளிட்ட கிராமங்களிலும் ஆய்வு நடைபெற்றது. இதில் வனவர்கள் அறிவழகன், சுரேஷ் மற்றும் வனத்துறையினர்கள் கலந்துகொண்டனர்.