திண்டுக்கல் வழியாக சென்ற ரெயில்களில் சோதனை
மதுரை தீ விபத்து சம்பவம் எதிரொலியாக, திண்டுக்கல் வழியாக சென்ற ரெயில்களில் வர்த்தக அதிகாரி தலைமையில் சோதனை நடத்தப்பட்டது.
மதுரை ரெயில் பெட்டியில் தீ
மதுரை ரெயில் நிலையத்தில் கடந்த 26-ந்தேதி நிறுத்தப்பட்டு இருந்த சுற்றுலா ரெயில் பெட்டி திடீரென தீப்பிடித்து எரிந்தது. இந்த விபத்தில் உத்தரபிரதேச மாநிலத்தை சேர்ந்த பெண்கள் உள்பட 9 பேர் பலியாகினர். மேலும் பலர் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் விசாரணை நடத்தியது.
விசாரணையில் சுற்றுலா ரெயில் பெட்டிக்குள் கியாஸ் அடுப்பு வைத்து சமையல் செய்த போது தீப்பிடித்தது தெரியவந்தது. உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இருந்து புறப்பட்ட சுற்றுலா ரெயில் பெட்டி பல்வேறு பகுதிகள் வழியாக மதுரைக்கு வந்தது. எனினும் ரெயில் பெட்டிக்குள் கியாஸ் அடுப்பு, கியாஸ் சிலிண்டர்கள் இருந்ததை யாரும் கண்டுபிடிக்கவில்லை.
ரெயில்களில் சோதனை
இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், ரெயில்வே நிர்வாகம் விரிவாக விசாரணை மேற்கொண்டு வருகிறது. மேலும் ரெயில்வே அதிகாரிகள், பணியாளர்கள் உள்பட பலரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது. இதற்கிடையே சுற்றுலா ரெயில் பெட்டிகள், அனைத்து ரெயில்களிலும் விதிமீறல்கள் நடப்பதை தடுக்க கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தும்படி தெற்கு ரெயில்வே நிர்வாகம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் அனைத்து ரெயில்களிலும் ரெயில்வே அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி திண்டுக்கல்லில் நேற்று மதுரை கோட்ட வர்த்தக ஆய்வாளர் சத்தியமூர்த்தி தலைமையிலான குழுவினர் வைகை, குருவாயூர், கன்னியாகுமரி, மும்பை, தேஜஸ் எக்ஸ்பிரஸ் உள்ளிட்ட ரெயில்களில் சோதனை செய்தனர்.
அப்போது ரெயில்களில் சமையல் பெட்டிகளில் தீ விபத்தை எச்சரிக்கும் கருவிகள் செயல்படுகிறதா?, ஒவ்வொரு பெட்டியிலும் தீயணைப்பான்கள் செயல்படும் நிலையில் இருக்கிறதா? என்றும் ஆய்வு செய்தனர்.