நலவாழ்வு மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நலவாழ்வு மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
வாய்மேடு:
'தினத்தந்தி' செய்தி எதிரொலியாக நலவாழ்வு மையத்தில் சுகாதாரத்துறை அலுவலர்கள் ஆய்வு செய்தனர்.
சேதமடைந்த நலவாழ்வு மைய கட்டிடம்
வாய்மேட்டை அடுத்த தகட்டூர் ஆதியங்காடு பகுதியில் மக்கள் நல வாழ்வு மையம் உள்ளது. இந்த மைய கட்டிடம் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இதில் மூன்று பணியாளர்களுடன் தற்போது வரை இந்த கட்டிடத்தில் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த கட்டிடத்தின் உள்பகுதியில் ஆங்காங்கே சிமெண்டு காரைகள் பெயர்ந்தும், விரிசல்கள் ஏற்பட்டும் அதன் வலிமைத்தன்மை இழந்த நிலையில் உள்ளது.
மழைக்காலத்தில் இந்த கட்டிடத்தில் உள்ள விரிசல்கள் வழியாக மழைநீர் கசிகிறது. இந்த சேதமடைந்த கட்டிடத்தில் இன்றுவரை பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர். எனவே இடிந்து விழும் நிலையில் உள்ள இந்த மக்கள் நல வாழ்வு மைய கட்டிடத்தை இடித்துவிட்டு புதிய கட்டிடம் கட்டி தர வேண்டும் என்று அப்பகுதி பொது மக்கள் அரசுக்கு கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்த செய்தி 'தினத்தந்தி' நாளிதழில் நேற்று வெளியானது.
'தினத்தந்தி' செய்தி எதிரொலி
அதன் எதிரொலியாக, மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் விஜயகுமார் உத்தரவின் பேரில், வட்டார மருத்துவ அலுவலர் சுந்தர்ராஜன், மாவட்ட நல கல்வியாளர் மணவாளன், ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி பாலகுரு மற்றும் செவிலியர்கள் சேதமடைந்த நல வாழ்வு மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.
மேலும் அதன் குறைபாடுகளை கண்டறிந்து விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறி சென்றனர். இதனால் மகிழ்ச்சியடைந்த பொதுமக்கள், இதுகுறித்து செய்தி வெளியிட்ட 'தினத்தந்தி' நாளிதழுக்கும், சுகாதாரத்துறை அலுவலர்களுக்கும் நன்றி தெரிவித்தனர்.