திருக்கோவிலூரில் உள்ளஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு :கெட்டுப்போன கோழி, மீன் இறைச்சிகளை கைப்பற்றி அழித்தனர்
திருக்கோவிலூரில் உள்ள ஓட்டல்களில் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதில் கெட்டுப்போன கோழி, மீன் இறைச்சிகளை கைப்பற்றி அவர்கள் அழித்தனர்.
திருக்கோவிலூர்,
நாமக்கல்லில் ஒரு ஓட்டலில் சவர்மா சாப்பிட்ட கலையரசி என்கிற சிறுமி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவத்தை தொடர்ந்து, தமிழகம் முழுவதும் உள்ள ஓட்டல்களில் உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்த வேண்டும் என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார்.
அதன்படி, திருக்கோவிலூர் நகராட்சி ஆணையாளர் கீதா, கள்ளக்குறிச்சி உணவு பாதுகாப்பு ஆய்வாளர் சண்முகம், நகராட்சி சுகாதாரப் பிரிவை சேர்ந்த செந்தில் மற்றும் உணவு பாதுகாப்பு துறை ஊழியர்கள் திருக்கோவிலூர் பகுதியில் உள்ள ஓட்டல்களில் திடீர் சோதனை நடத்தினர்.
ஓட்டல்களில் ஆய்வு
அப்போது, பெரும்பாலான சைவஓட்டல்களில் சமையல் செய்யும் இடம் அசுத்தமாக இருந்தது. இதனால் உரிமையாளர்களை அதிகாரிகள் கடுமையாக எச்சரிக்கை செய்தனர். அடுத்த முறை வரும்போது இதே நிலை நீடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தனர்.
மேலும், அசைவ ஓட்டல்களில் சோதனை நடத்திய போது 20-க்கும் மேற்பட்ட கடைகளில் கெட்டுப்போன கோழி மற்றும் மீன் வகை இறைச்சிகள் இருப்பது கண்டறியப்பட்டது. அவற்றை கைப்பற்றிய அதிகாரிகள், குப்பையில் கொட்டி அழித்தனர்.
எச்சரிக்கை
அதோடு, சாப்பாட்டில் கலப்பதற்காக வைத்திருந்த அஜினோமோட்டா மற்றும் சிக்கன் 65-க்கு பயன்படுத்தும் கலர் மாவுகளையும் பறிமுதல் செய்து கொட்டி அழித்தனர். இதுபோன்று தொடர்ந்து காலாவதியான உணவை பயன்படுத்தினால் ஓட்டலுக்கு சீல் வைக்கப்பட்டு, உரிமையாளர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் எச்சரித்து சென்றனர். அதிகாரிகள் ஆய்வின் போது, கடையில் சாப்பிட்டுக்கொண்டு இருந்தவர்கள், உரிமையாளர்களை திட்டிக்கொண்டே வெளியே சென்றதை பார்க்க முடிந்தது.