வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் ஆய்வு
கடலூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
கடலூர் மாவட்டத்தில் நடைபெறும் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகளையும், பல துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்படும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்வதற்காக நேற்று காலை மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அன்சுல் மிஸ்ரா கடலூர் வருகை தந்தார். பின்னர் அவர் கடலூர் கம்மியம்பேட்டையில் உள்ள அரசு பிற்படுத்தப்பட்டோர் கல்லூரி மாணவிகள் விடுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மாணவிகளுக்கு தயார் செய்து வழங்கப்படும் உணவை ருசி பார்த்து ஆய்வு செய்த அன்சுல் மிஸ்ரா, தனி அறையில் நூலகம் அமைத்து பராமரிக்கும்படியும், இ-நூலகத்தை விடுதியில் தொடங்கவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
அதனைத் தொடர்ந்து கல்லூரி விடுதி வளாகம், மாணவிகள் தங்கும் அறை உள்ளிட்ட இடங்களையும் பார்வையிட்டு அவர்களுக்கு அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்படுகிறதா? என மாணவிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.
டிரோன் மூலம் மருந்து தெளிப்பு
இதையடுத்து அண்ணாகிராமம் அருகே உள்ள எழுமேடு கிராமத்திற்கு சென்ற அன்சுல் மிஸ்ரா, அங்கு கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டத்தின் கீழ் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
மேலும் கரும்பின் வளர்ச்சியை அதிகப்படுத்த ஒற்றை பரு சீவல் கரும்பு செயல்விளக்க முறை குறித்து விளக்கி கூறிய கண்காணிப்பு அலுவலர், டிரோன் மூலம் மருந்து தெளிப்பதை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதேபோல் நெல்லிக்குப்பம், பண்ருட்டி, காடாம்புலியூர் உள்ளிட்ட பகுதியில் நடக்கும் வளர்ச்சி திட்டப்பணிகளையும் ஆய்வு செய்தார். அப்போது கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) மதுபாலன், கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, மாவட்ட வேளாண் துணை இயக்குனர் கென்னடி ஜெபக்குமார், அண்ணாகிராமம் வேளாண் உதவி இயக்குனர் சுரேஷ் உள்பட பலர் உடன் இருந்தனர்.