வளர்ச்சி திட்டப்பணிகளை கண்காணிப்பு அதிகாரி ஆய்வு

நெல்லை மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகளை மாவட்ட கண்காணிப்பு அதிகாரி செல்வராஜ் ஆய்வு செய்தார். அப்போது விடுபட்ட தகுதியான பெண்களுக்கு உரிமைத்தொகை வழங்க அறிவுறுத்தினார்.

Update: 2023-09-21 21:26 GMT

நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், மாவட்டத்தில் நடைபெற்று வரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கண்காணிப்பு அதிகாரியும், தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அரசு செயலாளருமான செல்வராஜ் தலைமை தாங்கினார். கலெக்டர் கார்த்திகேயன் முன்னிலை வகித்தார்.

கூட்டத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம், நெடுஞ்சாலை பணிகள், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டப்பணிகள், மதிய உணவு, அங்கன்வாடி மையங்கள் உள்பட பல்வேறு துறைகளின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மேலும் வருகிற வடகிழக்கு பருவமழை மற்றும் பேரிடர் காலத்தை எதிர்கொள்ள தயாராக இருக்க வேண்டும், மாவட்டத்தில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று அலுவலர்களுக்கு உத்தரவிட்டார். அரசு திட்டங்களை காலதாமதம் இன்றி செயல்படுத்த வேண்டும் என்றும் அறிவுறுத்தினார்.

முன்னதாக கண்காணிப்பு அதிகாரி செல்வராஜ் மாவட்டத்தில் பல்வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு செய்தார். நாங்குநேரி தாலுகா அலுவலகத்தில், கலைஞர் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படாததற்கான காரணங்களை தெரிந்து கொள்வதற்காக அமைக்கப்பட்டு உள்ள உதவி மையத்தை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது, தகுதியான நபர்கள் விடுபட்டிருந்தால், அவர்கள் பயன்பெறும் வகையில் ஆய்வு செய்து ரூ.1,000 வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.

இதைத்தொடர்ந்து நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் ரூ.12.13 கோடி செலவில் கட்டப்பட்டு வரும் வள்ளியூர் பஸ் நிலைய கட்டுமான பணி, நெல்லை கண்டியப்பேரி பாலம், பாறையடி, அன்னை வேளாங்கண்ணி நகரில் நடைபெறும் பாதாள சாக்கடை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த ஆய்வின்போது மாவட்ட வருவாய் அலுவலர் சுகன்யா, மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி, சேரன்மாதேவி உதவி கலெக்டர் முகமது சபீர் ஆலம், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் சுரேஷ், நெடுஞ்சாலை துறை கோட்ட பொறியாளர் முத்துகுமரன், பேரூராட்சிகள் உதவி இயக்குனர் வில்லியம் ஏசுதாஸ், உதவி கோட்டப்பொறியாளர் சேகர், வள்ளியூர் பேரூராட்சி செயல் அலுவலர் சுப்பிரமணியன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்