குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டிய பகுதியில் கலெக்டர் ஆய்வு
அருணாசலேஸ்வரர் கோவில் பே கோபுரம் சுற்றுச்சுவர் அருகில் குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டிய பகுதியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
அருணாசலேஸ்வரர் கோவில் பே கோபுரம் சுற்றுச்சுவர் அருகில் குடிநீர் குழாய் அமைக்க பள்ளம் தோண்டிய பகுதியில் கலெக்டர் முருகேஷ் ஆய்வு செய்தார்.
சிமெண்டு சாலை
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றி தேரோடும் மாடவீதியில் சிமெண்டு சாலை அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது.
முதற்கட்டமாக பே கோபுரத் தெரு, பெரிய தெருவில் நெடுஞ்சாலைத்துறை மூலம் சிமெண்டு சாலை அமைக்கப்பட உள்ளது. இதற்காக அந்த பகுதியில் பக்க கால்வாய்கள் அமைக்கும் பணிகள் நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக அந்த பகுதியில் ரூ.3 கோடியே 17 லட்சம் மதிப்பில் பழைய குடிநீர் குழாய்களை மாற்றி புதிதாக குடிநீர் குழாய்கள் அமைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகின்றது.
முதற்கட்டமாக பெரிய தெருவில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி முடிக்கப்பட்டு, தொடர்ந்து பே கோபுரத் தெருவில் இப்பணி தொடங்கப்பட்டது. இந்த நிலையில் அருணாசலேஸ்வரர் கோவில் பே கோபுரம் சுற்றுச்சுவர் அருகில் குடிநீர் குழாய் அமைப்பதற்காக கடந்த ஓரிரு தினங்களுக்கு முன்பு பள்ளம் எடுக்கப்பட்டு உள்ளது. பே கோபுரம் சுற்றுசுவர் அருகில் பள்ளம் எடுத்தால் பே கோபுரத்திற்கும், சுற்றுச்சுவருக்கும் பாதிப்பு ஏற்படும் என்று மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு அமைப்பினர் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது.
கலெக்டர் ஆய்வு
அதைத்தொடர்ந்து நேற்று திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் முருகேஷ் பே கோபுரம் அருகில் குழாய் அமைக்க பள்ளம் எடுக்கப்பட்ட பகுதியை நேரில் வந்து பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் குடிநீர் குழாய் அமைக்கும் பணியினை சுற்றுசுவர் மற்றும் பே கோபுரத்தின் அருகில் பாதிக்காமல் கோபுரத்தின் எதிர்புறத்தில் அமைத்திட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
ஆய்வின் போது நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் முரளி, உதவி கோட்ட பொறியாளர் ரகுராம், உதவி பொறியாளர் கலைமணி, திருவண்ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சணாமூர்த்தி, பொறியாளர் நீலேஸ்வரன் மற்றும் துறை அலுவலர்கள் உடனிருந்தனர்.