திண்டிவனம், மயிலம் பகுதிகளில் வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு

திண்டிவனம், மயிலம் பகுதிகளில் வேளாண், தோட்டக்கலை அதிகாரிகள் ஆய்வு செய்தனா்.

Update: 2022-07-09 17:20 GMT

விழுப்புரம் மாவட்ட தோட்டக்கலை துணை இயக்குனர் காரல்மார்க்ஸ், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்ட கிராமங்களில் ஆய்வு மேற்கொண்டார். ஒலக்கூர் வட்டாரத்தில் தாதாபுரம், சாரம், பட்டினம் ஆகிய கிராமங்களிலும், மயிலம் வட்டாரத்தில் பாம்பூண்டி கிராமத்திலும் தரிசு நிலங்களை சாகுபடிக்கு கொண்டு வருவதற்கும், நீர்வள ஆதாரத்தை பெருக்கவும் ஆய்வு செய்தார். அப்போது கிராம விவசாயிகளிடம் இத்திட்டத்தின் பயன்கள் பற்றி எடுத்துரைத்ததோடு அரசின் அனைத்து நலத்திட்டங்களையும் ஒருங்கிணைத்து விவசாயிகள் பயன்பெற ஆலோசனை வழங்கினார்.

இதனை தொடர்ந்து திண்டிவனம் உழவர் சந்தையை வேளாண் துணை இயக்குனர் (வேளாண் வணிகம்) கண்ணகி, தோட்டக்கலை துணை இயக்குனர் காரல்மார்க்ஸ் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது விற்பனை உரிமம் பெற்றுள்ள விவசாயிகளின் விளைபொருட்களான காய்கறிகள், கீரைகள், பழங்களின் தரத்தை பார்வையிட்டதோடு உழவர் சந்தைக்கு காய்கறி வரத்தை அதிகரிக்கவும், சாகுபடி பரப்பை அதிகரிக்கவும், இயற்கை விவசாயத்தின் அவசியம் குறித்தும் ஆலோசனை வழங்கினர். இந்த ஆய்வின்போது தோட்டக்கலை உதவி இயக்குனர் சுகந்தி, தோட்டக்கலை அலுவலர் இளவரசி, உதவி தோட்டக்கலை அலுவலர்கள் தேவேந்திரன், சரவணன், வெங்கட்ராமன், உதவி வேளாண் அலுவலர் கவிதா ஆகியோர் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்