போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் காலணி தயாரிப்பு நிறுவனத்தில் கலெக்டர் சரயு திடீர் ஆய்வு
மத்தூர்:
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி சிப்காட் வளாகத்தில் கலெக்டர் சரயு நேற்று திடீரென ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது அங்கு செய்யாறு சிறப்பு பொருளாதார மண்டலத்தின் கீழ் இயங்கும் காலணி தயாரிக்கும் தனியார் நிறுவனத்தை அவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அந்த நிறுவனத்தில் காலணிகள் தயார் செய்யும் விதம், காலணிகள் ஏற்றுமதிக்காக பேக்கேஜ் செய்யும் முறைகள், பாதுகாப்பு ஏற்பாடுகள், பணியாளர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகள், பெண் பணியாளர்களின் குழந்தைகள் பராமரிப்பு அறை, பணியாளர்களின் அவசர சிகிச்சைக்காக இயங்கி வரும் மருத்துவமனை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பஸ் வசதிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும், நிறுவன உற்பத்தி பிரிவு மேலாளர்கள் காலணி உற்பத்தி, மூலப்பொருட்கள் குறித்தும், ஏற்றுமதி விவரம் குறித்தும், பணியாளர்களுக்கு வழங்கப்படும் அடிப்படை வசதிகள், ஊதியம், போக்குவரத்து வசதிகள் குறித்தும் மாவட்ட கலெக்டரிடம் எடுத்துரைத்தனர். இந்த ஆய்வின் போது நிறுவன துணைத்தலைவர் அருள் சம்பந்தம், போச்சம்பள்ளி தாசில்தார் தேன்மொழி, தனி தாசில்தார் கங்கை மற்றும் நிறுவன அலுவலர்கள் உடன் இருந்தனர்.