பள்ளிக்கல்வியில் இடைநிற்றலை தவிர்க்க சப்-கலெக்டர் ஆய்வு
பள்ளிக்கல்வியில் இடைநிற்றலை தவிர்க்க சப்-கலெக்டர் ஆய்வு
குடிமங்கலம்
குடிமங்கலம் அருகே கோட்டமங்கலத்தில் பள்ளிக்கல்வியில் இடைநிற்றலை தவிர்க்கும் வகையில் திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் குடிமங்கலம் வட்டாரத்தில் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி கல்வியின் அவசியம்
அனைவருக்கும் கல்வி என்பது அரசின் கொள்கையாக உள்ளது. ஆனால் சமீப காலங்களாக குடும்ப பொருளாதார சூழ்நிலை காரணமாக படிப்பை பாதியில் விடும் நிலைக்கு பல குழந்தைகள் தள்ளப்பட்டுள்ளனர்.
இவ்வாறான இடைநிற்றல் என்பது மாணவ- மாணவிகளின் கல்வியறியு, எதிர்காலம் போன்றவற்றில் பாதிப்பை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல் குழந்தைத்தொழிலாளர்கள், குழந்தைத்திருமணம் உள்ளிட்ட பல சிக்கல்களையும் உருவாக்குகிறது.
இதனைத்தவிர்க்கும் விதமாக பள்ளிப்படிப்பை பாதியில் விட்டவர்கள் குறித்த புள்ளி விவரங்களை சேகரிக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த நிலையில் பள்ளிக் கல்வியில் இடைநிற்றலைத்தவிர்க்க திருப்பூர் சப்-கலெக்டர் ஸ்ருதன் ஜெய் நாராயணன் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் குடிமங்கலத்தையடுத்த வரதராஜபுரம் பகுதியில் பள்ளி மாணவர்களை சந்தித்தார்.
பொருளாதார மேம்பாடு
பள்ளிக்கல்வியை பாதியில் நிறுத்தி தாலிக்கயிறு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்த மாணவியை அவர் நேரில் சந்தித்தார்.
தந்தை இறந்ததால் வாழ்வாதாரம் இழந்த நிலையில் கல்வியைக் கைவிட வேண்டிய சூழல் ஏற்பட்டதாக மாணவி மற்றும் மாணவியின் தாய் கண்ணீர் மல்க தெரிவித்தனர்.
மகளிர் சுய உதவி குழுக்கள் மூலம் அந்த குடும்பத்தின் பொருளாதாரம் மேம்படுவதற்கான உதவிகளை செய்வதாக உறுதியளித்த சப்- கலெக்டர் பள்ளிப்படிப்பை தொடருமாறு வலியுறுத்தினார்.