பள்ளிபாளையம்:
சென்னை- கன்னியாகுமரி வழித்தட திட்டத்தின் கீழ் நெடுஞ்சாலை துறை சார்பில் மேம்பாலம் அமைக்கும் பணி நடந்து வருகிறது. இதையொட்டி பள்ளிபாளையத்தில் உள்ள திருச்செங்கோடு சாலையில் மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதுவரை 98 தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது அதன் மேல் பில்லர் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது.
இதற்கிடையே பஸ் நிலையத்தில் தூண்கள் அமைப்பதற்காக போக்குவரத்தை மாற்றி அமைக்க மாற்றுவழி ஏற்படுத்்தப்பட்டது. ஆனால் தற்போது வரை போக்குவரத்து மாற்றப்படாததால் மேம்பால பணிகள் மந்த நிலையில் நடந்தன.
இந்த நிலையில் சென்னை நெடுஞ்சாலைத்துறை சாலை பணி தலைமை பொறியாளர் செல்வம் நேற்று மேம்பால பணிகளை ஆய்வு செய்தார். பஸ் நிலைய ரோடு, சேலம் சாலையில் தூண்களை விரைந்து அமைக்க தேவையான அறிவுரைகளை வழங்கினார்.
மேலும் போக்குவரத்து மாற்றம் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், 2 அல்லது 3 நாட்களில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு பணிகள் நடைபெறும் என கூறினார். ஆய்வின்போது கோட்ட பொறியாளர் சசிகுமார், உதவி பொறியாளர்கள், நெடுஞ்சாலை துறை அதிகாரிகள், ஒப்பந்ததாரர்கள் உடன் இருந்தனர்.