விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு

ஓமலூர், நங்கவள்ளி பகுதிகளில் விதை விற்பனை நிலையங்களில் துணை இயக்குனர் ஆய்வு செய்தார்.

Update: 2023-05-05 20:30 GMT

ஓமலூர் மற்றும் நங்கவள்ளி வட்டாரத்தில் விவசாயிகளுக்கு தரமான விதைகள், நாற்றுகள் வழங்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் விதை விற்பனை நிலையங்களில் விதை ஆய்வு துணை இயக்குனர் செல்வமணி திடீரென ஆய்வு மேற்கொண்டார். அப்போது அரசு மற்றும் தனியார் விதை விற்பனையாளர்கள் விற்பனை செய்யும் விதைகளுக்கு உரிய கொள்முதல் பட்டியல்கள் மற்றும் விற்பனை பட்டியல்கள் உரிய முறையில் பராமரிக்கப்படுகிறதா? என்பதை ஆய்வு செய்தார்.

இதையடுத்து முளைப்புத்திறன் ஆய்வறிக்கை இல்லாமல் விற்பனை செய்யக்கூடாது என்று அவர்களுக்கு அறிவுறுத்தினார். மேலும் விதை விற்பனையாளர்கள் இருப்பு பதிவேடு, கொள்முதல் பட்டியல்கள், பதிவுச்சான்றுகள் விதைகளின் இருப்பு விவரம் மற்றும் விற்பனை விலை பலகை உரிய முறையில் பராமரிக்க வேண்டும். விதை குவியல்கள் அருகில் உரம் மற்றும் பூச்சி கொல்லிகளை வைக்க கூடாது என்று அறிவுறுத்தினார். ஆய்வின் போது ஓமலூர் விதை ஆய்வாளர் கிரிஜா உடன் இருந்தார்.

இதுகுறித்து செல்வமணி கூறும் போது, 'உரிய ஆவணங்கள் இன்றி விற்பனை செய்யப்பட்ட விதை குவியல்களுக்கு விற்பனை தடை விதிக்கப்பட்டது. விவசாயிகள் உரிமம் பெற்ற விதை விற்பனையாளர்களிடம் விதை வாங்க வேண்டும். விற்பனை பட்டியல் கேட்டுப்பெற வேண்டும். விற்பனை பட்டியலில் விதைக்குவியல் எண் மற்றும் காலாவதி தேதியை உறுதி செய்ய வேண்டும். விதை விற்பனையாளர்களிடம் முளைப்புத்திறன் ஆய்வறிக்கையை சரிபார்க்க வேண்டும்' என்றார்.

மேலும் செய்திகள்