தர்மபுரியில் மாம்பழ மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் ஆய்வு
தர்மபுரி:
தர்மபுரியில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை கடைகளில் உணவு பாதுகாப்பு துறையினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அதிகாரிகள் திடீர் ஆய்வு
தர்மபுரி மாவட்டத்தில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை நிலையங்களில் மாம்பழங்களை செயற்கையாக பழுக்க வைத்து விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட நிர்வாகத்திற்கு பல்வேறு புகார்கள் வந்தன. இந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்குமாறு உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு கலெக்டர் சாந்தி உத்தரவிட்டார்.
அதன்பேரில் உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா தலைமையில் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர்கள் நந்தகோபால், குமணன், கந்தசாமி உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் தர்மபுரி பஸ் நிலையங்கள், சந்தைப்பேட்டை, கோட்டை, மதிகோன்பாளையம், டவுன் ஹால் பகுதி, கடை வீதி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மாம்பழ மொத்த விற்பனை நிலையங்கள், குடோன்கள் மற்றும் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.
பறிமுதல்
15-க்கும் மேற்பட்ட மாம்பழம் மற்றும் வாழைப்பழம் குடோன்களில் நடத்தப்பட்ட ஆய்வில் எந்த விதமான ரசாயனத்தை கொண்டும் பழங்கள் பழுக்க வைக்கப்படவில்லை என கண்டறியப்பட்டது. ஒரு மாம்பழம் மொத்த விற்பனை கடையில் மட்டும் சுமார் 50 கிலோ அளவிலான தரமற்ற அழுகிய பழங்கள் மற்றும் சிறிய அளவிலான செயற்கை ரசாயன பவுடர் 2 பாக்கெட்டுகள் கண்டெடுக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் 2 வாழைப்பழ குடோன்கள் சுகாதாரமற்ற முறையில் வைத்திருந்ததற்காக எச்சரித்து நோட்டீஸ் வழங்கப்பட்டது. தொடர்ந்து 3 கடைகளுக்கும் தலா ரூ.2 ஆயிரம் வீதம் அபராதம் விதிக்கப்பட்டது. சந்தேகத்தின் அடிப்படையில் 2 கடைகளில் இருந்து வாழைப்பழம் பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டது.
தண்ணீரில் மூழ்கி விடும்
இதுதொடர்பாக தர்மபுரி மாவட்ட உணவு பாதுகாப்பு துறை நியமன அலுவலர் டாக்டர் பானு சுஜாதா கூறியதாவது:-
நுகர்வோர் தாங்கள் வாங்கும் மாம்பழங்கள் இயற்கையாக பழுக்க வைக்கப்பட்டதா என்பதை பார்த்து வாங்க வேண்டும். இயற்கையாக பழுத்த பழங்கள் அடிப்பகுதியில் இருந்து பழுக்க ஆரம்பிக்கும். இயற்கையான முறையில் பழுத்த மாம்பழம் காம்பு பகுதி பெரும்பாலும் மஞ்சள் நிறத்தில் இருக்காது. மேலும் அனைத்து பகுதிகளும் ஒரு சேர மஞ்சள் நிறத்தில் இருக்காது. சில பகுதிகள் பச்சை, சிவப்பு, மஞ்சள் என நிறங்கள் வேறுபடும்.
ஆனால் கல் வைத்து பழுக்க வைக்கப்பட்ட பழங்களின் அனைத்து பகுதியும் மஞ்சள் நிறத்தில் காணப்படும். மாம்பழத்தை நுகரும்போது இயற்கையாக பழுத்த மாம்பழங்கள், பழ வாசனை அடிக்கும். மேலும் தண்ணீரில் மாம்பழத்தை போட்டால் இயற்கையாக பழுத்த பழங்கள் தண்ணீரில் மூழ்கிவிடும். செயற்கையான முறையில் பழுத்தவை தண்ணீரில் மிதக்கும். பழங்களை உண்பதற்கு முன்பு அதனை தண்ணீரில் கழுவ வேண்டும்.
இது போன்ற ஆய்வுகள் மாவட்டம் முழுவதும் தொடர்ந்து நடத்தப்படும். செயற்கையாக கார்பைடு கல் கொண்டோ, ஏத்திலீன் திரவம் மற்றும் பவுடர் கொண்டோ மாம்பழங்களை பழுக்க வைப்பது கண்டறியப்பட்டால் உணவு பாதுகாப்பு சட்ட விதிகள் படி அபராதம் விதிப்பதுடன், சட்டரீதியான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று பழங்களை விற்பனை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.