கடத்தூரில்குளிர்பான கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-04-30 19:00 GMT

உணவு பாதுகாப்பு துறை மாவட்ட நியமன அலுவலர் டாக்டர் பானுசுஜாதா மேற்பார்வையில் மொரப்பூர் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் உள்ளிட்ட குழுவினர் கடத்தூரில் புதிய மற்றும் பழைய பஸ் நிலையம், அரூர் மெயின் ரோடு, தர்மபுரி மெயின் ரோடு, பொம்மிடி மெயின் ரோடு மற்றும் சில்லாரஅள்ளி பகுதிகளில் உள்ள குளிர்பான கடைகள், பழக்கடைகள், பேக்கரிகள் மற்றும் குளிர்பானம் மொத்த விற்பனை நிலையங்களில் ஆய்வு நடத்தினர்.

இந்த ஆய்வின்போது அரசின் வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி குளிர்பானங்கள் தயாரிக்கப்படுகிறதா? குளிர்பானங்கள் தயாரிக்க பயன்படுத்தும் மூலப்பொருள்கள் தரமானதாகவும், உரிய காலாவதி தேதி உள்ள பொருட்களாக உள்ளதா? என ஆய்வு செய்யப்பட்டது. மேலும் குடிநீர் பாட்டில்கள், கேன்களில் உரிய தரச்சான்று மற்றும் உணவு பாதுகாப்பு உரிமம் பெற்று தயாரிப்பு தேதி, முடிவு தேதி ஆகியவை அச்சிடப்பட்டுள்ளதா என்றும், பழச்சாறு குளிர்பானங்கள் தயாரிக்கும் பழ வகைகள் தரமானதாகவும், புதியதாகவும் முறையாக நீரால் கழுவி, பாதுகாக்கப்பட்ட குடிநீரால் தயாரிக்கிறார்களா என கண்காணிக்கப்பட்டது.

இந்த ஆய்வில் 2 கடைகளில் இருந்து தரமற்ற அழுகிய பழங்கள் பறிமுதல் செய்து அப்புறப்படுத்தப்பட்டது. மேலும் ஒரு கடையில் உரிய தேதி அச்சிடாத குளிர்பானங்கள், சுத்திகரிக்கப்பட்ட 20 லிட்டர் குடிநீர் கேன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது. இந்த 3 கடைகளுக்கும் தலா ரூ.1000 வீதம் ரூ.3000 அபராதம் விதிக்கப்பட்டது. ஒரு மொத்த விற்பனை நிலையத்தில் குளிர்பானம் தரமறிய உணவு மாதிரி எடுத்து பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. பகுப்பாய்வு அறிக்கை அடிப்படையில் மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என சம்பந்தப்பட்ட கடை விற்பனையாளருக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. 

Tags:    

மேலும் செய்திகள்