ராசிபுரம், சேந்தமங்கலத்தில்தொழிலாளர் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வுமுத்திரையிடாத தராசுகள் பறிமுதல்

Update: 2023-01-22 18:45 GMT

ராசிபுரம், சேந்தமங்கலத்தில் தொழிலாளர்கள் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு நடத்தினர்.

திடீர் ஆய்வு

சென்னை தொழிலாளர் ஆணையர் அதுல் ஆனந்த் உத்தரவின்பேரில் நாமக்கல் தொழிலாளர் உதவி ஆணையர் (அமலாக்கம்) திருநந்தன் தலைமையில் தொழிலாளர் உதவி ஆய்வாளர்கள் மற்றும் முத்திரை ஆய்வாளர்கள் இணைந்து ராசிபுரம், சங்ககிரி பகுதிகளில் உள்ள பழக்கடை, காய்கறி கடைகள், இறைச்சி மற்றும் மீன் கடைகளில் திடீர் ஆய்வு செய்தனர்.

இந்த ஆய்வின்போது சட்டமுறை எடையளவு சட்டத்தின் கீழ் எடை குறைவு, முத்திரை மற்றும் மறுமுத்திரையிடப்படாத எடையளவுகள் பயன்படுத்துதல், தரப்படுத்தப்படாத எடைஅளவுகள், மறுபரிசீலனை சான்று காட்டி வைக்கப்படாமை, சோதனை எடை கற்கள் வைத்திருக்காதது போன்ற விதிமீறல்கள் கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தமாக 66 கடைகளில் ஆய்வு செய்யப்பட்டதில் முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்ட தராசுகள் பறிமுதல் செய்யப்பட்டன.

அபராதம்

அப்போது அதிகாரிகள் தரப்பில், எடையளவுகளை உரிய காலத்திற்குள் முத்திரை மற்றும் மறுமுத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் எனவும், வணிகர்கள் இதுவரை முத்திரையிடாமல் பயன்படுத்தி வரும் தங்களது எடையளவுகளை முத்திரை ஆய்வாளர் அலுவலகத்திற்கு சென்று முத்திரையிட்டு கொள்ள வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் கடைகளில் மறுமுத்திரை சான்றிதழ் நன்றாக தெரியும்படி வைக்க வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டது.

இதேபோல் சேந்தமங்கலம் பகுதியில் உள்ள இறைச்சி கடைகளிலும் தொழிலாளர் ஆணைய அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மொத்தம் 66 கடைகளில் ஆய்வுகள் செய்ததில் முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்திய மின்னணு தராசுகள், மேஜை தராசுகள் மற்றும் விட்டதராசு ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். மேலும் எடை அளவுகளை உரிய காலத்திற்குள் முத்திரை மற்றும் மறு முத்திரையிடாமல் பயன்படுத்துவது கண்டறியப்பட்டால் குறைந்தபட்சம் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.25 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும் என்று வணிகர்களிடம் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்