தேவதானப்பட்டி அருகே மலைக்கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு
தேவதானப்பட்டி அருகே மலைக்கிராமத்தில் பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் ஆய்வு செய்தார்.
தேவதானப்பட்டி அருகே மஞ்சளாறு அணை பகுதிக்கு மேலே ராசிமலைநகர் என்ற மலைக்கிராமம் உள்ளது. இங்கு பழங்குடியின மக்கள் ஏராளமானோர் வசித்து வருகின்றனர். இவர்களுக்காக ஜி.கல்லுப்பட்டியை சேர்ந்த தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் 1992-ம் ஆண்டு 25 வீடுகள் கட்டப்பட்டது. ஆனால் நாளடைவில் அந்த வீடுகள் சேதமடைந்தது. இதைத்தொடர்ந்து தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தின் சார்பில் ராசிமலைநகர் மக்களின் பயன்பாட்டிற்காக 35 வீடுகள் கட்டப்பட்டு வந்தன. தற்போது அந்த பணிகள் முடிவடையும் நிலையில் உள்ளன.
இந்தநிலையில் புதிதாக கட்டப்படும் வீடுகளை மாநில பழங்குடியினர் நலத்துறை இயக்குனர் அண்ணாதுரை இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது ராசிமலைநகரை சேர்ந்த பழங்குடியின மக்களிடம், அடிப்படை வசதி, கல்வி உள்ளிட்ட தேவைகள் குறித்து அவர் கலந்துரையாடினார். இந்த ஆய்வின்போது, தேனி மாவட்ட ஆதிதிராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் சாந்தி, பெரியகுளம் தாசில்தார் ராணி மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.