முல்லை பெரியாறு குடிநீர் பணிகளை கமிஷனர் ஆய்வு
முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
முல்லை பெரியாறு குடிநீர் திட்டப்பணிகளை கமிஷனர் ஆய்வு செய்தார். அப்போது அவர் பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
அரசு அனுமதி
மதுரை மாநகருக்கு தற்போது வைகை அணையில் இருந்து தினமும் 115 எம்.எல்.டி. குடிநீர் கொண்டு வந்து வினியோகம் செய்யப்படுகிறது. இதுதவிர கோச்சடை, மேலக்கால், மணலூர் ஆகிய வைகை ஆற்றுப்படுகையில் இருந்து 47 எம்.எல்.டி. குடிநீரும், காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலம் 9 எம்.எல்.டி. நீரும் என மொத்தம் 171 எம்.எல்.டி. நீர் நகரில் வினியோகம் செய்யப்படுகிறது.
இந்த நீர் மூலம் தற்போது 4 நாளுக்கு ஒரு முறை மட்டுமே குடிநீர் வினியோகம் செய்ய முடிகிறது. எதிர்காலத்தில் மக்கள் தொகை அதிகரித்தால் இந்த நீரின் அளவு போதுமானதாக இருக்காது.
எனவே முல்லை பெரியாறு அணையில் இருந்து தினமும் 125 எம்.எல்.டி. நீர் எடுக்க தமிழக அரசு மாநகராட்சிக்கு அனுமதி அளித்தது. அதனைத்தொடர்ந்து மத்திய அரசின் அம்ரூத் திட்டத்தின் கீழ் ரூ.1,296 கோடி செலவில் முல்லை பெரியாறு கூட்டுக்குடிநீர் திட்டம் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் அடிக்கல் நாட்டப்பட்டு பணிகள் நடந்து வருகிறது.
இந்த பணியை விரைந்து முடிக்க வேண்டும் என்று முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ உள்பட பலரும் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். 2024-ம் ஆண்டுக்குள் பணி முடிவடைந்து விடும் என்று மாநகராட்சி தரப்பில் கூறப்பட்டுள்ளது.
குடிநீர் தொட்டிகள்
இந்த திட்டப்பணிக்காக முல்லை பெரியாறு லோயர் கேம்ப் பகுதியில் தடுப்பணை கட்டுதல், பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையம் வரை 96 கி.மீ. நீளத்திற்கு சுத்திகரிக்கப்படாத குடிநீர் பிரதானக் குழாய் பதித்தல், பண்ணைப்பட்டியில் 125 எம்.எல்.டி. குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைத்தல், பண்ணைப்பட்டியில் இருந்து மதுரை மாநகர் வரை 54 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் பிரதான குழாய் பதித்தல், நகரில் 38 குடிநீர் மேல்நிலைத் தொட்டிகள் கட்டுதல் போன்ற பணிகள் நடந்து வருகிறது.
அதில் பண்ணைப்பட்டி சுத்திகரிப்பு நிலையத்தில் நடந்து வரும் பணிகளை மாநகராட்சி கமிஷனர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் நேற்று ஆய்வு செய்தார்.
உத்தரவு
அப்போது திட்ட மிட்டப்படி பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதனைத்தொடர்ந்து கமிஷனர், தேனி மாவட்டம் உப்பார்பட்டி பிரிவில் இரும்பு குழாய்கள் பதிக்கும் பணிகளையும், பெத்தானியாபுரத்தில் குடிநீர் தொட்டி கட்டும் பணிகளையும் பார்வையிட்டார். இந்த ஆய்வின் போது கண்காணிப்பு பொறியாளர் அன்பழகன், செயற்பொறியாளர் (குடிநீர்) பாக்கியலட்சுமி, மக்கள் தொடர்பு அலுவலர் மகேசுவரன் உள்பட பலர் உடன் இருந்தனர்.