தர்மபுரி சிறைச்சாலைகள், முதியோர் இல்லங்களில்மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் ஆய்வு

Update: 2023-08-31 19:00 GMT

தர்மபுரியில் உள்ள சிறைச்சாலைகள் மற்றும் முதியோர் இல்லங்களில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் ஆய்வு மேற்கொண்டார்.

ஆணைய உறுப்பினர் ஆய்வு

தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் நேற்று தர்மபுரி வந்தார். அவர் நல்லம்பள்ளியில் உள்ள நிர்மலா ஆண்கள் மற்றும் பெண்கள் முதியோர் இல்லங்கள், குழந்தைகள் தத்தெடுப்பு மையம், தர்மபுரி மாவட்ட சிறைச்சாலை, கிளைச்சிறை, கலங்கரை விளக்கம் அரசு மறுவாழ்வு மையம் உள்ளிட்ட இடங்களை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது அங்குள்ள தங்கும் அறைகள், குளியல் அறைகள், குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, கழிப்பறைகள் மற்றும் சமைக்கும் உணவின் தரம் குறித்தும் மேலும் அடிப்படை வசதிகள் குறித்தும் அவர் ஆய்வு மேற்கொண்டார்.

அப்போது தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் வி.கண்ணதாசன் கூறியதாவது:-

தர்மபுரி மாவட்டத்தில் அனைத்து இல்லங்கள், மாவட்ட சிறைச்சாலை, கிளை சிறைச்சாலை அனைத்தும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மாவட்ட நிர்வாகம், காவல்துறை, சிறைத்துறை, சமூக நலத்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளும், ஒருங்கிணைந்து செயல்படுவதால் அனைத்து இல்லங்களும் மிகச் சிறப்பாக இயங்கி வருகின்றன. இது தொடர்பான ஆய்வறிக்கை தமிழ்நாடு அரசுக்கு சமர்ப்பிக்க உள்ளோம்.

சட்ட உதவிகள்

சிறைச்சாலைகளில் அறைகள் தூய்மையாக உள்ளதா என்பதையும், குடிநீர் வசதி, காற்றோட்ட வசதி, உணவின் தரம் இவற்றையெல்லாம் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டோம். சிறைச்சாலைகளில் மிக நீண்ட காலம் இருக்கக்கூடிய சிறைவாசிகளுக்கு உரிய சட்ட உதவிகள், உறவினர்கள் தரக்கூடிய செய்திகள் இவை எல்லாம் முறையாக சென்று அடைகின்றதா என்பது குறித்தும் கேட்டறிந்தோம். குறிப்பாக சிறைவாசிகள் குற்றச்சாட்டும் ஏதும் இல்லை என்று தெரிவித்துள்ளார்கள். தமிழ்நாட்டில் உள்ள மத்திய சிறைச்சாலைகள் மற்றும் கிளை சிறைச்சாலைகளில் குறைந்த எண்ணிக்கையில் சிறைவாசிகள் உள்ளனர். அதனால் இட நெருக்கடி என்பது கிடையாது. மனித உரிமை அடிப்படையில் தத்து மையம், இல்லங்களில் உள்ள முதியோர்கள், சிறுவர்கள் நல்ல முறையில் பராமரிக்க மாவட்ட நிர்வாகம் உள்ளிட்ட அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து பணியாற்றிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின் போது மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலர் செல்வம், மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் செண்பகவள்ளி உட்பட தொடர்புடைய அலுவலர்கள், சிறைச்சாலை அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்