மாவட்டத்தில்சட்டசபை பொதுகணக்கு குழு ஆய்வு

Update: 2023-08-22 19:30 GMT

கிருஷ்ணகிரி:

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.

பொது கணக்கு குழு ஆய்வு

தமிழ்நாடு சட்டசபை பொது கணக்கு குழு தலைவர் செல்வ பெருந்தகை தலைமையில் குழு உறுப்பினர்கள் எம்.எல்.ஏ.க்கள் டி.ராமச்சந்திரன், டி.மதியழகன், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, ஈஸ்வரன், பாலாஜி, சேகர் ஆகியோர் நேற்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஆய்வு மேற்கொண்டனர். அவர்களுடன் மாவட்ட கலெக்டர் சரயு உடன் சென்றார்.

நீர்வளத்துறை சார்பில் ரூ.187 கோடியே 77 லட்சம் மதிப்பில் நடந்து வரும் எண்ணேகொள் திட்ட பணிகளை ஆய்வு செய்தனர். இந்த திட்டம் மூலம் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 26 ஏரிகள், தர்மபுரி மாவட்டத்தில் 7 ஏரிகள் மற்றும் ஒரு அணை மூலம் 23 கிராமங்களை சேர்ந்த 3,408 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை

தொடர்ந்து குழுவினர் போலுப்பள்ளி கிருஷ்ணகிரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு சென்ற அவர்கள் அங்குள்ள டிஜிட்டல் எக்ஸ்ரே, அவசர சிகிச்சை பிரிவு, மருந்தகம், வெளிப்புற நோயாளிகளின் வருகை மற்றும் அவர்களுக்கு வழங்கப்படும் மருத்துவ சிகிச்சைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

அதன் பிறகு கிருஷ்ணகிரி அணை அரசு மேல்நிலைப்பள்ளியை பார்வையிட்டு மாணவர்களின் வருகை பதிவேடு, ஆசிரியர்கள் வருகை, மாணவர்களின் கற்றல் கற்பித்தல் திறன், கடந்த ஆண்டில் 10, 12-ம் வகுப்பு தேர்ச்சி விகிதங்களை ஆய்வு செய்தனர். மேலும் பழுதடைந்த நிலையில் உள்ள வகுப்பறைகளை உடனடியாக சீரமைக்க பொதுப்பணித்துறை (கட்டிடங்கள்) அலுவலர்களுக்கு அறிவுறுத்தினர்.

நல உதவிகள்

தொடர்ந்து கிருஷ்ணகிரி அணை, திம்மாபுரம் அரசு தோட்டக்கலை பண்ணை, நாகரசம்பட்டி அரசு ஆதி திராவிடர் மாணவர் நல விடுதி, பாரண்டப்பள்ளி ஓலா வாகன தொழிற்சாலை, ஓலைப்பட்டி செய்யாறு காலணி தயாரிப்பு தொழிற்சாலைகளை ஆய்வு செய்தனர்.

தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் பல்வேறு துறைகள் சார்பாக நிலுவையில் உள்ள மனுக்கள் மீதான நடவடிக்கைகள் குறித்து துறை சார்ந்த அலுவலர்களுடன் ஆய்வு கூட்டம் நடந்தது. இதையடுத்து 31 பயனாளிகளுக்கு ரூ.2 கோடியே 47 லட்சத்து 32 ஆயிரத்து 384 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

இந்த நிகழ்ச்சிகளில் சேலம் சரக டி.ஐ.ஜி. ராஜேஸ்வரி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சரோஜ்குமார் தாக்கூர், மாவட்ட வருவாய் அலுவலர் சாதனைக்குறள், கலெக்டரின் நேர்முக உதவியாளர் வேடியப்பன், கூடுதல் கலெக்டர் வந்தனா கார்க், ஓசூர் மாநகராட்சி ஆணையாளர் சினேகா, ஓசூர் உதவி கலெக்டர் சரண்யா, மாவட்ட வன அலுவலர் கார்த்திகேயணி, பொது கணக்கு குழு சார்பு செயலாளர் பாலசீனிவாசன் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்