சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும்தனியார் பஸ்களில் கட்டணம் உயர்வா?அதிகாரிகள் ஆய்வு

Update: 2023-08-05 19:31 GMT

சேலம்

சேலத்தில் இருந்து ஈரோடுக்கு இயக்கப்படும் சில தனியார் பஸ்களில் திடீரென கட்டணம் உயர்வு செய்யப்பட்டதாக தகவல் வெளியானது. அதாவது, சேலத்தில் இருந்து ஈரோடுக்கு ரூ.43-ல் இருந்து ரூ.45 ஆகவும், ஒரு நிறுத்தத்தில் இருந்து மற்றொரு நிறுத்தத்தில் இறங்குவதற்கு குறைந்தபட்சம் ரூ.10 வசூலிக்கப்பட்டு வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுகிறதா? என்பது குறித்து சேலம் வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நேற்று புதிய பஸ் நிலையத்திற்கு வந்து ஆய்வு செய்தனர். ஆனால் சில்லறை தட்டுப்பாடு காரணமாக ஒரு சில தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்பட்டு வருவது தெரியவந்தது. இதையடுத்து சம்பந்தப்பட்ட தனியார் பஸ்களின் கண்டக்டர்களுக்கு அதிகாரிகள் அறிவுரை வழங்கினர்.

இதனிடையே, இது தொடர்பாக சேலம் மாவட்ட தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் சார்பில் சேலம் மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலருக்கு ஒரு மனு வழங்கப்பட்டுள்ளது.

அந்த மனுவில், சேலத்தில் இருந்து ஈரோடு வழித்தடத்தில் இயங்கும் தனியார் பஸ்களில் சில்லறை தட்டுப்பாடு காரணமாக ஒருசில கண்டக்டர்கள் பயணிகளுக்கு சில்லறை வழங்காமல் இருந்துள்ளனர். இதனால் கட்டண உயர்வு என்று கூறுவது தவறு. எந்தவிதமான கட்டண உயர்வையும் செய்யவில்லை. சேலத்தில் இருந்து ஈரோடு செல்லும் தனியார் பஸ்களில் பயணிகளுக்கு உரிய சில்லறை வழங்காத கண்டக்டர்களுக்கு உரிய அறிவுரை வழங்கி உள்ளோம். இதுபோன்ற தவறுகள் இனிமேல் நடக்காது என்பதை தெரிவித்துக்கொள்கிறோம், என்று கூறப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்