பயிா் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை முழுமையாக வழங்க விவசாயிகள் வலியுறுத்தல்

போதிய மழை பெய்யாததால் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.

Update: 2023-09-22 19:39 GMT

பயிர் காப்பீடு

புதுக்கோட்டை மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. கூட்டத்திற்கு கலெக்டர் மெர்சி ரம்யா தலைமை தாங்கினார். கூட்டத்தில் விவசாய சங்க பிரதிநிதிகள், விவசாயிகள் உள்பட பலர் கலந்து கொண்டு விவசாயம் தொடர்பான பிரச்சினைகள் குறித்து பேசினர். அப்போது அவர்கள் கூறியதாவது:-

குருங்களூர் சுப்பையா பேசுகையில், புதுக்கோட்டை மாவட்டம் வறட்சி மாவட்டமாக உள்ளது. நிலத்தடி நீர் குறைந்து கொண்டே வருகிறது. மாவட்டத்தில் தைலமரக்காடுகளை அகற்ற வேண்டும். இல்லையேல் விவசாயம் முற்றிலும் அழிவை நோக்கி சென்று விடும் என்றார். நடராஜன் பேசுகையில், மாவட்டத்தில் போதிய மழை பெய்யாததால் விவசாயம் பாதிப்படைந்த நிலையில் பயிர் காப்பீடு திட்டத்தில் இழப்பீடு தொகையை விவசாயிகளுக்கு முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரி, கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்றார்.

உழவர் சந்தை

தனபதி பேசுகையில், புதுக்கோட்டை நகரில் உள்ள உழவர் சந்தை மிகவும் இடநெருக்கடியாக உள்ளதால் அருகே உள்ள நகராட்சி வாரச்சந்தை பகுதியில் விரிவான உழவர் சந்தையும், காய்கறி மொத்த வியாபார மண்டியும், வேளாண் விற்பனை துறை, மூலம் அமைக்க வேண்டும் என்றார். கொக்குமடை ரமேஷ் பேசுகையில், கல்லணை கால்வாய் பாசனத்தில் உள்ள பயிர்கள் தண்ணீர் இன்றி கருகி வருகிறது. கூட்டுறவு சங்கங்களில் பயிர்க்கடன் விரைவாக வழங்க வேண்டும். உரங்கள் தட்டுப்பாடின்றி கிடைக்க வேண்டும். விவசாய வேலை ஆரம்பித்த நிலையில் 100 நாள் வேலையை 2 மாதத்திற்கு நிறுத்தி வைக்க வேண்டும் என்றார்.

முந்திரி கொட்டை

துரைமாணிக்கம் பேசுகையில், ஆவுடையார்கோவில் ஒன்றிய பகுதியில் நிலத்தடி நீர் உப்பு தன்மையாக இருந்து வருகிறது. இதனை கவனிக்க வேண்டும். ஏரிகளை தூர்வாரியும், நீர் வழித்தடங்களை சீர் செய்து கொடுக்க வேண்டும் என்றார். பவுன்ராஜ் பேசுகையில், முந்திரி கொட்டை விலைபோகாமல் குடோன்களில் தேக்கி வைக்கப்பட்டுள்ளது. எனவே அரசே கொள்முதல் செய்ய வேண்டும்' என்றார். கூத்தப்பெருமாள் பேசுகையில், விவசாயிகள் குறைதீர்க்கும் கூட்டம் என்பதற்கு பதிலாக குறைகள் கேட்கும் கூட்டம் என பெயர் மாற்றம் செய்துக்கொள்ளலாம். 10 கோரிக்கைகள் கூறினால் ஒன்று கூட நிறைவேறுவதில்லை. மணமேல்குடி பகுதியில் இறால் பண்ணையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் கண்மாயில் கலப்பதை தடுக்க வேண்டும் என்றார்.

ஆக்கிரமிப்புகள்

மிசாமாரிமுத்து பேசுகையில், கவிநாடு கண்மாயை தூர்வார வேண்டும். வரத்துவாரிகளில் ஆக்கிரமிப்புகளை அகற்றி விவசாயத்திற்கு வழி செய்ய வேண்டும். மின்னாத்தூர் பொியகுளத்தை தூர்வார வேண்டும் என்றார். இதேபோல விவசாயிகள் பலர் கோரிக்கைகள் தொடர்பாக பேசினர். காவிரியில் கர்நாடக அரசு தண்ணீர் திறக்க மறுப்பதை கண்டித்து பேசினர்.

கூட்டத்தில் கலெக்டர் மெர்சி ரம்யா பதில் அளித்து பேசுகையில், ஆவுடையார்கோவில் பகுதியில் நிலத்தடி நீர் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அந்த பகுதியில் உள்ள ஊராட்சிகளுக்கு குடிநீர் குழாய்கள் இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்க திட்டமிடப்படுகிறது. அரசு ஆஸ்பத்திரி, பொது இடங்களில் குரங்குகள் தொல்லையை போக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. மாவட்டத்தில் கண்மாய்களில் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்கப்படுகிறது. வரத்து வாரிகளில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். இதற்காக அதிகாரிகள் கொண்ட குழுவினர் நியமிக்கப்பட்டுள்ளனர். துறைவாரியாக ஆலோசித்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

கூட்டத்தில் வேளாண் துறைசார்ந்த திட்டங்களின் கையேடுகள் வெளியிடப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்