முதல்-அமைச்சரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வலியுறுத்தல்

முதல்-அமைச்சரை விவசாயிகள் சந்திக்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

Update: 2022-10-28 20:02 GMT

மானிய விலையில் தீவனங்கள்

பெரம்பலூர் மாவட்ட விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் கலெக்டர் அலுவலகத்தில் நேற்று நடந்தது. கூட்டத்திற்கு கலெக்டர் ஸ்ரீவெங்கடபிரியா தலைமை தாங்கி விவசாயிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்றார். கூட்டத்தில் விவசாயிகள், விவசாய சங்கங்களை சேர்ந்தவர்கள், முன்னோடி விவசாயிகள் தங்களது குறைகளை கலெக்டரிடம் தெரிவித்து பேசினர்.

அப்போது தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்க மாநில துணைத் தலைவர் செல்லதுரை பேசுகையில், தமிழகத்தில் பால் கொள்முதல் விலையை உற்பத்தியாளர்களுக்கு உயர்த்தி கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு தீவனங்களை மானிய விலையிலும், மாட்டு கொட்டகை அமைக்க 50 சதவீத மானியமும் வழங்க வேண்டும், என்றார்.

நிலங்களை ஒப்படைக்க வேண்டும்

அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் மாநில குழு உறுப்பினர் ரமேஷ் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் அரசு வேளாண்மைக் கல்லூரி தொடங்க வேண்டும். மாவட்டத்தில் சிறப்பு பொருளாதார மண்டலம் திட்டம் கைவிடப்பட்டதாக தெரிகிறது. எனவே, இத்திட்டத்துக்காக கையகப்படுத்திய விவசாய நிலங்களை அதன் உரிமையாளர்களிடமே திரும்ப ஒப்படைக்க வேண்டும். சின்னமுட்லு நீர்த்தேக்க திட்டத்தை செயல்படுத்த அரசு முன்வர வேண்டும், என்றார்.

தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் நீலகண்டன் பேசுகையில், தமிழக முதல்-அமைச்சர் கரும்பு விவசாயிகளுக்காக அறிவித்த ஊக்கத்தொகை எப்போது வழங்கப்படும் எனும் விபரத்தை கலெக்டர் தெரிவிக்க வேண்டும். செயல்படாமல் கிடக்கும் செட்டிக்குளம் சின்ன வெங்காய சேமிப்பு கிடங்கு செயல்பட நடவடிக்கை எடுக்க வேண்டும், என்றார்.

வாக்குவாதம்

விவசாயி வரதராஜன் பேசுகையில், பெரம்பலூர் மாவட்டத்தில் படைப்புழு தாக்குதலுக்கு உள்ளாகி உள்ள மக்காச்சோள பயிர்களுக்கு மாவட்ட நிர்வாகம் சலுகை விலையில் தரமான பூச்சிக்கொல்லி ரசாயனங்கள் வேளாண்துறை மூலம் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழக முதல்-அமைச்சர் வருகிற 4-ந்தேதி பெரம்பலூருக்கு வருகை தருகிறார். அப்போது அவரை விவசாய சங்க பிரதிநிதிகள் நேரில் சந்தித்து விவசாயம் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து கருத்து தெரிவிக்க கலெக்டர் ஏற்பாடு செய்ய வேண்டும், என்றார்.

இதையடுத்து கலெக்டர் பேசுகையில், விவசாயிகளின் நீண்ட நாள் கோரிக்கைகளை தீர்க்க குழு அமைத்து துறை அதிகாரிகளுடன் ஒன்றிணைந்து தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும். விவசாய திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்து பெரம்பலூருக்கு வருகை தரவுள்ள முதல்-அமைச்சரிடம் வலியுறுத்தப்படும், என்றார். முன்னதாக கூட்டத்தில் கலெக்டர் இல்லாதபோது விவசாயிகள் அரசு அலுவலர்களுடன் கோரிக்கைகள் தொடர்பாக பேசியபோது வாக்குவாதம் ஏற்பட்டது குறிப்பிடத்தக்கது.

கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் அங்கையற்கண்ணி, வேளாண்மை இணை இயக்குனர் கருணாநிதி மற்றும் மாவட்ட அளவிலான அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்