திருச்சியில் மது குடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை -அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்
திருச்சியில் மது குடித்து 2 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தல்.
சென்னை,
பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் எம்.பி. தனது டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-
திருச்சி மாவட்டம் லால்குடியை அடுத்த தச்சன்குறிச்சியில் அரசு மதுக்கடையில் மது குடித்த முனியாண்டி, சிவக்குமார் ஆகியோர் திடீர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. அவர்கள் குடித்த மதுவில் நஞ்சு எதுவும் கலக்கவில்லை என்று ஆய்வில் தெரியவந்திருக்கிறது. அப்படியானால், அரசு மதுக்கடையில் ஒன்றாக மது வாங்கி ஒன்றாக அருந்திய 2 பேர் உயிரிழந்ததற்கான காரணம் என்ன? என்ற கேள்வியும், அச்சமும் எழுகிறது. எனவே விசாரணை நடத்தவேண்டும்.
மது உயிரை குடிக்கும் எமன் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால், கடந்த சில வாரங்களில் மது குடித்தவர்கள் உடனுக்குடன் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மதுக்கடைகளில் கலப்பட மது விற்பனை செய்யப்பட்டதா? என்று பல்வேறு தரப்புகளில் எழுப்பப்படும் ஐயங்களுக்கு விடையளிக்க வேண்டியது அரசின் கடமை. அரசு மதுக்கடை மரணங்கள் குறித்து விசாரணை நடத்த அரசு ஆணையிட வேண்டும்.
தெருவுக்கு தெரு மதுக்கடைகள் திறக்கப்பட்டிருப்பது தான் அனைத்துக்கும் காரணம். மதுவில்லாத தமிழகமே மகிழ்ச்சியான தமிழகமாக அமையும். எனவே, தமிழ்நாட்டில் அனைத்து மது வகைகளாலும் ஆண்டுக்கு 5 லட்சம் பேர் உயிரிழக்கும் கொடுமைக்கு முடிவு கட்ட, தமிழகத்தில் உள்ள அனைத்து மதுக்கடைகளையும் மூடி முழு மதுவிலக்கை நடைமுறைப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.