மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களிடம் விசாரணை
திண்டுக்கல்லில் மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பதாரர்களிடம் வீடு வீடாக சென்று களவிசாரணை செய்யும் பணி தொடங்கியது.
தமிழக அரசு கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்தில் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 வழங்க இருக்கிறது. இதற்காக மாநிலம் முழுவதும் இருகட்டங்களாக விண்ணப்பம், டோக்கன் வழங்கப்பட்டது. பின்னர் ரேஷன்கடைகள் அமைந்த பகுதிகளில் முகாம் நடத்தப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் திண்டுக்கல் மாவட்டத்தை பொறுத்தவரை 1,157 ரேஷன்கடைகள் இருக்கின்றன. இந்த ரேஷன்கடைகள் மூலம் மொத்தம் 6 லட்சத்து 87 ஆயிரத்து 171 பேருக்கு இருகட்டமாக உரிமைத்தொகை விண்ணப்பம் வழங்கப்பட்டது. முதல்கட்டமாக 3 லட்சத்து 47 ஆயிரத்து 148 பேருக்கும், 2-ம் கட்டமாக 3 லட்சத்து 40 ஆயிரத்து 25 பேருக்கும் விண்ணப்பம் வழங்கப்பட்டது.
மேலும் இரு கட்டமாக முகாம் நடத்தி விண்ணப்பம் பெறப்பட்டது. அதில் விடுபட்ட நபர்களிடம் சிறப்பு முகாமில் விண்ணப்பம் பெறப்பட்டது. இந்த விண்ணப்பத்தில் ஆதார், வங்கி கணக்கு, மின் இணைப்பு எண், வீடு, நிலம் உள்ளிட்டவை தொடர்பான விவரங்கள் கேட்கப்பட்டு இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் உரிமைத்தொகை திட்ட விண்ணப்பங்கள் வீடு, வீடாக சென்று களவிசாரணை செய்யும்படி அரசு உத்தரவிட்டது.
இதற்காக ஒரு செயலியும் உருவாக்கப்பட்டது. மேலும் ஒவ்வொரு ரேஷன்கடைக்கும் தலா ஒரு அரசு அலுவலர் நியமிக்கப்பட்டு களவிசாரணை தொடங்கியது.களவிசாரணை தொடங்கியது.அதன்படி திண்டுக்கல் மாநகராட்சி பகுதிகளில் நேற்று மகளிர் உரிமைத்தொகை விண்ணப்பங்களுடன் வீடு, வீடாக சென்று களவிசாரணை மேற்கொண்டனர். அப்போது விண்ணப்பத்தில் குறிப்பிட்ட தகவல்கள் அனைத்தும் சரியானதா? என்று விசாரித்தனர்.