அதிகாரிகளை முற்றுகையிட்ட உள்நாட்டு மீனவர்கள்

நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மாற்ற உள்நாட்டு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2023-06-01 18:45 GMT

நாகர்கோவில்:

நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மாற்ற உள்நாட்டு மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததோடு கருத்துக்கேட்பு கூட்டத்தில் அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

மீன்வளத்துறை அலுவலகம் மாற்றம்

நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மாற்றி அமைப்பது தொடர்பாக குமரி மாவட்ட உள்நாட்டு மீனவர் சங்கங்களுடனான கருத்துக் கேட்பு கூட்டம் நேற்று நாகர்கோவிலில் உள்ள மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தில் நடந்தது. மீன்வளத்துறை துணை இயக்குனர் காசிநாத பாண்டியன் தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் மோகன்ராஜ் முன்னிலை வகித்தார். அப்போது உள்நாட்டு மீனவர்கள் சங்கங்கள் சார்பில் மீனவ பிரதிநிதிகள் அந்தோணி, அலெக்சாண்டர், வேல்முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் அதிகாரிகள் பேசுகையில், "உள்நாட்டு மீனவர்கள் வசதிக்காக செயல்பட்டு வந்த நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் 3-ஆக பிரிக்கப்பட்டு குளச்சல், சின்னமுட்டம் மற்றும் தேங்காப்பட்டணம் ஆகிய மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்துடன் இன்று (அதாவது நேற்று) முதல் இணைக்கப்பட உள்ளது. மேலும் உள்நாட்டு மீனவர்கள் தங்களது கருத்துகளை பதிவு செய்தால் அதன்படி கோர்ட்டில் தாக்கல் செய்யப்படும்" என கூறினர்.

உள்நாட்டு மீனவர்கள் எதிர்ப்பு

இதற்கு உள்நாட்டு மீனவர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-

மீன்வளத்துறை அலுவலகத்தை மாற்றுவது என்ற அறிவிப்பை முன்பே தெரிவிக்காமல், இன்று (அதாவது நேற்று) மாற்றுவதாக கூட்டத்தில் அதிகாரிகள் கூறுவது கண்டிக்கத்தக்கது. இப்படி அவசர அவசரமாக அலுவலகத்தை இடமாற்றம் செய்து பணிகள் மாற்றி அமைக்கப்பட்டால், உள்நாட்டு மீனவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவார்கள். ஒரு நலத்திட்ட உதவி பெற விண்ணப்பிக்கவும், புகார் தெரிவிக்கவும் பல கிலோ மீட்டர் பஸ் பயணம் செய்து வர வேண்டியிருக்கும். இதற்காக மீனவர்கள் வேலைகளை விட்டு ஒரு நாள் முழுவதும் மீனவளத்துறை அலுவலகத்தில் இருக்க வேண்டிய நிலை உருவாகி உள்ளது.

மேலும் கருத்துக் கேட்பு கூட்டம் என கூறி, மீனவர்களிடம் கருத்துகளை கேட்காமலே நாகர்கோவில் மீன்வளத்துறை அலுவலகத்தை மாற்றும் நடவடிக்கையை அதிகாரிகள் மேற்கொள்வது கண்டனத்துக்குரியது. அலுவலக மாற்றம் தொடர்பாக ஆரல்வாய்மொழி முதல் களியக்காவிளை வரை உள்ள 2 லட்சம் உள்நாட்டு மீனவர்களுக்கு எப்படி தகவல் தெரியும்?. ஏற்கனவே மீனவர் நல வாரியத்தில் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு சேர்க்கப்பட்ட 5,100 மீனவர்களுக்கு இதுவரை அடையாள அட்டை வரவில்லை. இதற்கு போதுமான பணியாளர்கள் இல்லாததே காரணம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

அதிகாரிகளை முற்றுகையிட்டதால் பரபரப்பு

இதற்கு அதிகாரிகள் தரப்பில் கூறுகையில், "அலுவலகம் இட மாற்றம் என்பது தமிழக அரசின் உத்தரவு. அதேபோல் கருத்துக் கேட்பு கூட்டம் நடத்துவதும் கோர்ட்டு உத்தரவு. எங்களுக்கே நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகம் மாற்றப்படுவது இப்போது தான் தெரியும். அதன்படி அலுவலக மாற்றும் நடவடிக்கை நடந்து வருகிறது. உங்களது கருத்துகளை எழுத்து வடிவமாக தாருங்கள். அதனை கோர்ட்டுக்கு அனுப்பி வைக்கிறோம். பின்னர் அதற்கான முடிவை கோர்ட்டும், அரசும் தெரிவிக்கும்" என்றனா்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்த உள்நாட்டு மீனவர்கள், கருத்துக் கேட்பு கூட்டத்தில் கோர்ட்டு முடிவு தெரிவிக்கும் வரை நாகர்கோவில் மீன்வளத்துறை உதவி இயக்குனர் அலுவலகத்தை மாற்றும் நடவடிக்கையை அதிகாரிகள் கைவிட வேண்டும் என கூறினர். இப்படி அதிகாரிகளுக்கும், மீனவர்களுக்கும் இடையே கடும் வாக்குவாதம் நடந்தது.

அப்போது சில மீனவர்கள் அதிகாரிகளை முற்றுகையிட்டு அலுவலகத்திலும், அலுவலக வளாகத்திலும் அமர்ந்து போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அதிகாரிகள் மற்றும் போலீசார் சேர்ந்து மீனவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது உள்நாட்டு மீனவர்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி தர வேண்டும் என அதிகாரிகள் தெரிவித்தனர். இதையடுத்து உள்நாட்டு மீனவ சங்கங்கள் தங்களது கோரிக்கைகளை மனுவாக எழுதி கொடுத்தனர். பின்னர் போராட்டம் முடிவுக்கு வந்தது.

Tags:    

மேலும் செய்திகள்