தென் மாவட்டங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிக்க கட்டமைப்பு வசதிகள் தயார்- திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிப்பு

தென் மாவட்டங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

Update: 2022-11-29 18:51 GMT


தென் மாவட்டங்களில் இயக்கப்படும் ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான கட்டமைப்பு வசதிகள் தயார் நிலையில் உள்ளதாக திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டு உள்ளது.

திட்ட அறிக்கை

தென்னக ரெயில்வேயில் இயக்கப்படும் ரெயில்களின் அதிகபட்ச வேகத்தை அடைவதற்கான இலக்கு குறித்த விரிவான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை-பெங்களூரு இடையேயான ரெயில் பாதையில், மணிக்கு 160 கி.மீ. வேகத்தில் ரெயில் இயக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து விளக்கப்பட்டுள்ளது. அதேபோல பிரிவு-ஏ, 'பி' ரெயில் பாதைகளிலும், ரெயில்களின் வேகத்தை அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதை இந்த திட்டம் உறுதிப்படுத்தியுள்ளது.

தற்போது, 'பி' பிரிவில் சென்னை-திண்டுக்கல், அரக்கோணம்- ஜோலார்பேட்டை, ஜோலார்பேட்டை-போத்தனூர் ஆகிய ரெயில் பாதையில் தற்போது மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் ரெயில்கள் இயக்கப்படுகிறது. அதனை மணிக்கு 130 கி.மீ. வேகமாக அதிகரிப்பதற்கான பணிகள் நடந்து வருகிறது.

பாதை பராமரிப்பு

இதில் அரக்கோணம்-ஜோலார்பேட்டை ரெயில் பாதையில் வேகத்தை அதிகரிப்பதற்கான பணிகள் வருகிற மார்ச் மாதத்துக்குள் முடிவடையும். இதுதவிர, இந்த நிதியாண்டில் (2022-23) தற்போது வரை நாகர்கோவில்-நெல்லை(100 கி.மீ.), நெல்லை-திருச்செந்தூர் (70 கி.மீ.), நெல்லை-தென்காசி(70 கி.மீ.), திண்டுக்கல்-பொள்ளாச்சி (100 கி.மீ.), மதுரை-வாஞ்சி மணியாச்சி(100 கி.மீ.) வேகத்தில் இயக்கப்படும் ரெயில்கள் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கு தயாராக உள்ளன.

இதற்காக, அந்த பாதையில் உள்ள தண்டவாளங்களை உறுதிப்படுத்தும் பணிகள், பாலங்கள் பலப்படுத்தும் பணி, வளைவுகளை குறைக்கும் பணி, ரெயில் போக்குவரத்துக்கு இடையூறாக தண்டவாளங்களை மனிதர்கள், மிருகங்கள் கடக்கும் பகுதிகளில் காம்பவுண்டு சுவர், தானியங்கி சிக்னல், மின்சார வயர் செல்லும் பாதை பராமரிப்பு ஆகிய பணிகள் முடிவடைந்துள்ளன.

வேகம் அதிகரிக்கப்படும்

இதுகுறித்த விரிவான திட்ட அறிக்கை ரெயில்வே வாரியத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. வாரியத்தின் ஒப்புதல் கிடைத்தவுடன் மேற்கண்ட வழித்தடங்களில் ரெயில்களின் வேகம் அதிகரிக்கப்படும். ஆனால், தற்போது அனுமதிக்கப்பட்டுள்ள வேகத்தை விட குறைவான வேகத்தில் தான் தென் மாவட்ட ரெயில்கள் இயக்கப்படுகின்றன. நாட்டின் பகுதி அதிவேக ரெயிலாக கருதப்படும் வந்தேபாரத் எக்ஸ்பிரஸ் ரெயில் மணிக்கு 80 கி.மீ. வேகத்தில் மட்டுமே இயக்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இதற்கிடையே, தென்னக ரெயில்வேக்கு உள்பட்ட கேரள மாநிலத்திலும் குறைந்தபட்சம் 80 கி.மீ. வேகத்தில் இயக்கப்படும். ரெயில்கள் விரைவில் மணிக்கு 110 கி.மீ. வேகத்தில் இயக்குவதற்கான திட்ட அறிக்கையும் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்