கைத்தறி, விசைத்தறி நிறுவனங்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும்

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

Update: 2023-02-07 17:15 GMT

ராணிப்பேட்டை மாவட்டத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நிறுவனங்களின் தகவல்களை சேகரிக்க வேண்டும் என்று கலெக்டர் வளர்மதி உத்தரவிட்டுள்ளார்.

ஆலோசனை கூட்டம்

துணி நூல் துறை சேலம் மண்டலத்திற்குட்பட்ட ராணிப்பேட்டை மாவட்டத்தில் உள்ள ஜவுளி மற்றும் ஆடை தொழில் நிறுவனங்களின் புள்ளி விவரங்களை சேகரித்து அதனை மேம்படுத்துவது குறித்தும், புதிதாக சிறு ஜவுளி பூங்கா அமைப்பது குறித்தும் சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுடன் ஆலோசனை கூட்டம் ராணிப்பேட்டை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடந்தது.

கலெக்டர் வளர்மதி தலைமை தாங்கினார். கூட்டத்தில் அவர் பேசியதாவது:-

புதிதாக உருவாக்கப்பட்ட துணி நூல் துறையின் மூலம் ஜவுளி தொழிலை வளர்ப்பதற்கு ஏற்ற கொள்கைகளை உருவாக்கும் பொருட்டு ஜவுளி உற்பத்தி மூலப்பொருள் நுகர்வு ஒட்டுமொத்த வருவாய் மற்றும் மாநிலத்தில் இருந்து ஏற்றுமதிக்கான தற்போதைய உள்கட்டமைப்பு ஆகியவற்றின் தகவல்கள் சேகரிக்கப்பட உள்ளது.

புள்ளி விவரங்கள்

துணி நூல் துறையில் ஜவுளித்துறை தொடர்பான தகவல்கள் மாநில அரசு, மத்திய அரசு மற்றும் ஜவுளி சங்கங்கள் போன்றவற்றில் போதிய தகவல்கள் இல்லை என்பதால் ஜவுளி தொழில் தொடர்பான புள்ளி விவரங்கள் சேகரிக்கப்பட்டு அவற்றை மேம்படுத்தும் பணிகள் தொடங்க உள்ளது.

அதற்காக ராணிப்பேட்டை மாவட்டத்தில் ஏற்கனவே இயங்கி வரும் கைத்தறி, விசைத்தறி நிறுவனங்களில் தகவல்கள் சேகரிக்கப்பட வேண்டும். மேலும் புதிதாக சிறு ஜவுளி பூங்கா அமைக்க விரும்பும் நபர்களின் விவரங்களையும் சேகரிக்கலாம்.

அந்த வகையில் தொழிலக பாதுகாப்பு மற்றும் சுகாதாரம் மூலம் நிறுவனத்தின் பாதுகாப்பு மற்றும் சுகாதாரங்கள் கடைபிடிக்கப்பட்டு வருவது குறித்தும், தமிழ்நாடு மின்சார வாரியம் மூலம் நிறுவனத்திற்கு எவ்வளவு மின்சாரம் தேவைப்படுகிறது.

அதை முறையாக செலுத்தி வருகின்றனரா மேலும் தேவைகள் குறித்தும், வணிகவரித்துறை மூலம் ஜி.எஸ்.டி. வரிகள் முறையாக செலுத்தப்படுகின்றதா என்பது குறித்தும், தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலம் முறையான அனுமதி பெற்று நிறுவனம் இயங்கி வருகிறதா என்பது குறித்தும் விவரங்களை சேகரிக்க வேண்டும்.

ஊக்குவிக்க நடவடிக்கை

மேலும் தொழிலாளர் நலத்துறையின் மூலம் தொழிலாளர்களுக்கு ஜவுளி உற்பத்தி நிறுவனங்களில் வழங்கப்படும் பாதுகாப்புகள், நலத்திட்டங்கள் குறித்தும்,

வேளாண்மை துறையின் மூலம் பருத்தி சாகுபடி எவ்விடத்தில் அதிகமாக விளைவிக்கப்படுகின்றது குறித்த புள்ளி விவரங்களையும் தற்போது இயங்கி வரும் சிறு ஜவுளி சார்ந்த உற்பத்தி நிறுவனங்களில் புள்ளி விவரங்களை சேகரிக்க வேண்டும். மேலும் அதனை மேம்படுத்த தேவையான ஆலோசனைகளை வழங்க வேண்டும்.

இந்த அறிக்கையின் அடிப்படையில் ஜவுளி துறையை மேம்படுத்திடவும் புதிய சிறு ஜவுளி பூங்கா அமைக்க விரும்பும் விண்ணப்பதாரர்களை ஊக்குவிக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் துணி நூல் துறை மண்டல துணை இயக்குனர் அம்சவேணி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) சுரேஷ், வேளாண்மை இணை இயக்குனர் வடமலை மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்