கோடை மழையை பயன்படுத்தி சிறுதானியம் பயிரிடலாம்

கோடை மழையை பயன்படுத்தி சிறுதானியம் பயிரிடலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Update: 2023-05-05 18:45 GMT

நயினார்கோவில், 

நயினார்கோவில் வட்டாரத்தில் தற்போது கோடை மழை பெய்து வருகிறது. விவசாயிகள் சாகுபடி செய்யும் நிலங்களில் உளிக்கலப்பை அல்லது சட்டிக்கலப்பை மூலம் கோடை உழவு செய்து மேல்மண்ணை சிறு சிறு கட்டிகளாக்கி விட்டு விட வேண்டும். இதனால் கோடையில் பெய்யும் மழை நீரை வழிந்து ஓட விடாமல் மண்ணிலேயே நிறுத்தி வைக்க முடியும். கோடை காலத்தில் உழவு செய்யும் போது வெப்பம், குளுமை இரண்டும் மண்ணுக்கு கிடைக்கப்பெற்று மண்ணின் கட்டுமானம் பலப்படும். மண் அரிமானம் தடுக்கப்படும். மண்ணில் உள்ள பூச்சிகளின் முட்டைகள், இளம் புழுக்கள் வெளி கொணரப்பட்டு சூரிய ஒளியில் அழிக்கப்படுகிறது. களைகளின் வேர்கள் மற்றும் விதைகள் முளைப்பது தவிர்க்கப்படுகிறது. இதனால் பருவ காலங்களில் களை மற்றும் பூச்சி தாக்குதல் குறைகிறது. இத்தருணத்தில் கோடை உழவு அவசியம் செய்ய வேண்டும். கோடை உழவிற்கு பிறகு பாசன வசதி உள்ள நிலங்களில் தக்கைப்பூண்டு சாகுபடி செய்யலாம். போதுமான ஈரப்பதம் நிலத்தில் இருக்கும் போது எக்டேருக்கு 40 கிலோ விதைப்பு செய்யலாம். தக்கைப்பூண்டு சாகுபடி செய்வதால் மண்ணில் தழைச்சத்து அதிகரிக்கிறது. அடுத்து வளரும் பயிருக்கு தழைச்சத்து எளிதில் கிடைக்கும். போதிய நீர் பாசன வசதி உள்ளவர்கள் உளுந்து, பாசிப்பயறு உள்ளிட்ட சிறுதானிய பயிர்கள் சாகுபடி செய்யலாம் என வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

Tags:    

மேலும் செய்திகள்