நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டுதற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளி

Update: 2023-08-29 19:00 GMT

சரவணம்பட்டி

கோவையில் நண்பர்களுக்கு தகவல் தெரிவித்துவிட்டு தண்டவாளத்தில் நின்றவாறு தற்கொலைக்கு முயன்ற தொழிலாளியை சாதுர்யமாக போலீசார் மீட்டனர்.

தனியார் நிறுவன தொழிலாளி

கோவை கோவில்பாளையம் காவல்நிலையத்திற்குட்பட்ட கிரவுன் சிட்டி பகுதியைச் சேர்ந்தவர் முபாரக் (வயது56). இவர் அப்பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வரும் முபாரக் குடும்பத்தினருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2 நாட்களாக மிகவும் மன வருத்தத்தில் இருந்துள்ளார். இந்நிலையில் முபாரக் நேற்று முன்தினம் இரவு வீட்டில் யாரிடமும் சொல்லாமல் தற்கொலை செய்து கொள்ளும் எண்ணத்தில் வீட்டை விட்டு வெளியேறினார். அப்போது தனது நண்பர்களை செல்போனில் தொடர்பு கொண்டு நான் மிகவும் மன வருத்தத்தில் இருக்கிறேன், அதனால் தற்கொலை செய்து கொள்ளப்போகிறேன், வரக்கூடிய ரெயிலில் விழுந்து தற்கொலை செய்து கொள்ளப் போகிறேன்.

தண்டவாளத்தில் நின்று...

என்னை யாரும் தேட வேண்டாம், இதனை எனது குடும்பத்தினரிடம் கூறி விடுங்கள் என்று கூறியுள்ளார். இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அவரது நண்பர்கள் இதுகுறித்து கோவில்பாளையம் காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்துள்ளனர். இதனை அறிந்ததும் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் பெருமாளும்,முபாரக்கின் நண்பரும், முபாரக்கின் செல்போனில் கான்பிரன்ஸ் காலில் அழைத்தனர். அவர் எங்கு இருக்கிறார் என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தனர்.

அதேநேரம் கோவில்பாளையம் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து முபாரக் செல்போன் டவர் எந்த பகுதியில் உள்ளது என்று ஆய்வு செய்துள்ளனர். இந்த ஆய்வில் முபாரக் கோவையில் உள்ள சங்கனூர் பகுதிக்கும், டெக்ஸ்டூல் பாலத்துக்கும் அருகில் உள்ள தண்டவாளத்தில் நின்று கொண்டு பேசி கொண்டிருப்பது தெரிய வந்தது.

பாராட்டு

அதனைத்தொடர்ந்து கோவில்பாளையம் போலீசார் துரிதமாக செயல்பட்டு முபாரக்கின் நண்பர்களை முபாரக் இருக்கும் பகுதிக்கு செல்லுமாறு அறிவுறுத்தியுள்ளனர். அப்போது போலீஸ் பெருமாள் முபாரக்கிடம் அவரது குடும்பத்தை பற்றி உருக்கமாக பேசி அவரை தற்கொலை செய்யும் மனநிலையில் இருந்து மீண்டு வர சாதுர்யமாக பேசிக்கொண்டே இருந்துள்ளார். இந்த நிலையில்முபாரக்கின்

நண்பர்கள் அவர் இருக்கும் இடத்துக்கு சென்றுள்ளனர். அப்போது முபாரக் நண்பர்களை பார்த்ததும் கண்ணீர் விட்டு அழுதார். ஆனால் அவரது நண்பர்கள் முபாரக்கிடம் அன்பாக பேசி அங்கிருந்து வீட்டுக்கு அழைத்து வந்தனர். அவர்கள் அங்கிருந்து சென்ற சில நிமிடங்களில் அந்த வழியாக ரெயில் சென்றது குறிப்பிடத்தக்கது.

போலீசாரின் புத்திசாலித்தனமான முயற்சியினால் தற்கொலைக்கு முயன்ற முபாரக் காப்பாற்றப்பட்டுள்ளதாக முபாரக்கின் குடும்பத்தினரும், நண்பர்களும் போலீசாருக்கு நன்றியையும், பாராட்டுகளையும தெரிவித்தனர். இந்த சம்பவம் கோவையில்பரபரப்பை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்