சேலத்தில்730 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. வழங்கினர்

Update: 2023-08-01 19:58 GMT

சேலம் 

சேலம் சிறுமலர், அரிசிபாளையம் புனித மரியன்னை அரசு உதவி பெறும் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதற்கு கலெக்டர் கார்மேகம், வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. ஆகியோர் தலைமை தாங்கி 730 மாணவ, மாணவிகளுக்கு ரூ.35 லட்சத்து 31 ஆயிரத்து 360 மதிப்பில் விலையில்லா சைக்கிள்களை வழங்கினர்.

விழாவில் கலெக்டர் கார்மேகம் பேசுகையில், மாணவ, மாணவிகள் பள்ளிக்கு வந்து செல்ல வசதியாக பஸ் பாஸ், சைக்கிள்கள், பாடப்புத்தகம், புத்தகப்பைகள் என கல்விக்கு தேவையான அனைத்துத் தேவைகளையும் மாணவ, மாணவிகளுக்கு தமிழக அரசு வழங்கி வருகிறது. இதனால் உயிர்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. அதன்படி மாவட்டத்தில் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் இந்த கல்வியாண்டில் 11-ம் வகுப்பு படிக்கும் 8 ஆயிரத்து 852 மாணவர்கள், 13 ஆயிரத்து 127 மாணவிகள் என மொத்தம் 21 ஆயிரத்து 979 பேருக்கு ரூ.10 கோடியே 59 லட்சம் மதிப்பில் சைக்கிள்கள் வழங்கப்பட உள்ளது என்று கூறினார்.

வக்கீல் ராஜேந்திரன் எம்.எல்.ஏ. பேசுகையில், வரலாற்றில் இதுவரை இல்லாத அளவில் இந்தாண்டு ரூ.40 ஆயிரத்து 299 கோடி நிதி கல்வித்துறைக்கு மட்டும் ஒதுக்கப்பட்டு உள்ளது. இன்றைய மாணவர்கள் நாளைய எதிர்காலம் என்பதை உணர்ந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறார் என்று கூறினார்.

இந்த நிகழ்ச்சியில் துணை மேயர் சாரதாதேவி, உதவி கலெக்டர் அம்பாயிரநாதன், முதன்மைக்கல்வி அலுவலர் கபீர், கவுன்சிலர்கள் சாந்தமூர்த்தி, கிரிஜா, சிறுமலர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்கள் செபஸ்தியான், இருதயமேரி, உதவி தலைமை ஆசிரியர் கிறிஸ்துராஜா, உடற்கல்வி இயக்குனர் ராபர்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்