தொழில் நிறுவனத்தினர் உண்ணாவிரத போராட்டம்
தொழில் நிறுவனத்தினர் உண்ணாவிரத போராட்டம்
கோவை
பீக் ஹவர்ஸ் கட்டணத்தை திரும்ப பெற வலியுறுத்தி, கோவை காரணம்பேட்டையில் 5 ஆயிரம் நிறுவனத்தினர் 7-ந்தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்த உள்ளதாக கூட்டமைப்பினர் தெரிவித்தனர்.
பீக் ஹவர்ஸ் கட்டண உயர்வால் பாதிப்பு
கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களை சேர்ந்த 70-க்கும் மேற்பட்ட ஜவுளி, தொழிற்சாலைகள், சிறு குறு மற்றும் நடுத்தர தொழில் அமைப்புகள் இணைந்து தமிழ்நாடு தொழில்துறை மின் நுகர்வோர்கள் கூட்டமைப்பை தொடங்கியுள்ளன.
இந்த கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர்கள் ஜெயபால், ஜேம்ஸ், முத்துரத்தினம், சுருளிவேல், ஸ்ரீகாந்த் ஆகியோர் கோவையில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் 3 லட்சத்து 50 ஆயிரத்துக்கு மேற்பட்ட குறு சிறு நடுத்தர தொழில் முனைவோர்கள் "எல்.டி 111பி "என்ற மின் இணைப்பை பெற்றவர்கள். எங்களில் பெரும்பாலானோர் முதல் தலைமுறை தொழில் முனைவோர்கள். மற்ற மின் நுகர்வோர்களை போல மின்கட்டணத்தில் சலுகையோ, இலவச மின்சாரமோ, தனியார் ஜெனரேட்டர் நிறுவனங்களிடம் இருந்து குறைந்த விலையில் மின்சாரத்தை வாங்கிக் கொள்ளும் அனுமதியோ, காற்றாலை மூலம் மின்சாரத்தை பேங்கிங் வசதியுடன் பெற்றுக் கொள்ளும் அனுமதியோ எதுவும் இல்லை.
100 சதவீதம் மின்வாரியத்தை சார்ந்தே தொழில் செய்து வருகின்றோம். கடந்த செப்டம்பர் மாதம் அமல்படுத்தப்பட்ட மின்கட்டண உயர்வு, டிமாண்ட் சார்ஜ் புதிதாக விதிக்கப்பட்டபீக்ஹவர் கட்டணத்தினால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் நலிவடைந்து விடும் என, மின்வாரியத்திடமும், ஒழுங்கு முறை ஆணையத்திடமும், துறை சார்ந்த செயலாளர்கள் மற்றும் அமைச்சர்களை பல முறை நேரில் சந்தித்து கூறியுள்ளோம்.
7-ந்தேதி உண்ணாவிரதம்
430 சதவீதம் உயர்த்தப்பட்ட நிலைக்கட்டணத்தையும், தொழிலே செய்ய இயலமுடியாத நிலையில் கொண்டுவரப்பட்டுள்ள பீக்ஹவர் கட்டணத்தையும் திரும்பப்பெறக் கோரி முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு செல்லும் வகையில் வருகிற 7-ந் தேதி கோவை காரணம்பேட்டையில் ஒருநாள் கவன ஈர்ப்பு உண்ணாவிரத போராட்டத்தை மேற்கொள்ள உள்ளோம்.
இந்த உண்ணாவிரதப் போராட்டத்தில் 70 அமைப்புகளில் உள்ள சுமார் 5 ஆயிரம் நிறுனங்களை சேர்ந்தவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். கொரோனாவால் பாதிக்கப்பட்டு தற்போது 30 சதவீதம் தான் தொழில் நடைபெறுகிறது. ஜி.எஸ்.டி பிரச்சினை, மூலப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளோம்.தொழில்கள் நலிவடைந்துவிட்டன. பல தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டுவிட்டன.
தமிழக தொழில் நிறுவனங்கள் மற்ற நாடுகளோடு போட்டி போட்டுக்கொண்டிருந்த காலகட்டம் மாறிவிட்டது. தற்போது குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள தொழில் நிறுவனங்கள் தமிழக நிறுவனங்களுடன் போட்டி போடும் நிலை வந்துவிட்டது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.