"2028-ம் ஆண்டு வேலை வாய்ப்பில் சீனாவை இந்தியா முந்தும்" - நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேச்சு

2028-ம் ஆண்டு வேலை வாய்ப்பில் சீனாவை இந்தியா முந்தும் என்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் கூறினார்.

Update: 2022-09-11 04:24 GMT

மேலக்கோட்டையூர்,

செங்கல்பட்டு மாவட்டம் மேலக்கோட்டையூரில் உள்ள இந்திய தகவல் தொழில் நுட்ப வடிவமைப்பு மற்றும் உற்பத்தி நிறுவனத்தின் பத்தாம் ஆண்டு பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் மாணவ, மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கி பாராட்டினார்.

நிகழ்ச்சியில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் பேசியதாவது:-

தொழில் நுட்பங்களை நோக்கி உலகம் நகர்ந்து கொண்டிருக்கிறது, எனவே பெற்றோர்கள் இதைப் புரிந்து கொள்ள வேண்டும். புதிய கல்விக் கொள்கை, உயர் கல்விக்கு ஏராளமான வாய்ப்புகளைக் கொடுத்துள்ளது.

மாணவர்கள் சமூகம் பொருளாதார முன்னேற்றம் அடைய வேண்டியது அவசியம். உலக அளவில் வளர்ந்து வரும் அறிவியல் தொழில் நுட்பங்களை போட்டி மனப்பான்மையோடு அணுக வேண்டும்.அறிவியல் மற்றும் அதன் திறன் மேம்பாடு மிகவும் அவசியம்.

இந்தியா வளர்ச்சியை நோக்கி சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது. உலகளாவிய தலை சிறந்த 58 நிறுவனங்களின் தலைமை பொறுப்பில் இந்தியர்கள் இருக்கின்றனர். 2028 ஆண்டு வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் உயரும்.

2026-ல் நமது நாட்டில் வேலை பார்ப்பவர்கள் எண்ணிக்கை 65% ஆக அதிகரிக்கும். எனவே 2047 ஆம் ஆண்டு இந்தியா பொருளாதார அளவில் பெரும் சக்தி மிக்க நாடாக மாறும். அதற்கு இந்தக் குறிக்கோள்களை நாம் பின்பற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்