உலக அளவில் இந்தியா முதன்மை வல்லரசாக திகழும்

100-வது சுதந்திர தினத்தையொட்டி உலகளவில் இந்தியா முதன்மை வல்லரசாக திகழும் என்று வேலூரில் மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

Update: 2023-06-20 16:54 GMT

100-வது சுதந்திர தினத்தையொட்டி உலகளவில் இந்தியா முதன்மை வல்லரசாக திகழும் என்று வேலூரில் மத்திய மந்திரி வி.கே.சிங் தெரிவித்தார்.

இந்தியாவில் முதலீடு

வேலூரில் பா.ஜ.க. வர்த்தகர் பிரிவு சார்பில் வணிகர்கள் மாநாடு இன்று நடந்தது. வணிகர் பிரிவு மாவட்ட தலைவர் நரேந்திரபாபு தலைமை தாங்கினார்.

வர்த்தக பிரிவு மாநில செயலாளர் கலைமகள் இளங்கோ, மாநில செயலாளர் கோ.வெங்கடேசன், மாநில பொதுச்செயலாளர் கார்த்தியாயினி, மாவட்ட தலைவர் மனோகரன், கவுன்சிலர் சுமதி மனோகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

சிறப்பு அழைப்பாளராக மத்திய மந்திரி வி.கே.சிங், மாநில துணை தலைவர் நாராயணன் திருப்பதி, தேசிய துணை தலைவர் அருணா ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் மத்திய மந்திரி வி.கே.சிங் பேசியதாவது:-

9 ஆண்டுகள் பா.ஜ.க. ஆட்சியில் இந்தியா முன்னேற்றம் கண்டுள்ளது. 61 வகையான தொழில்களுக்கு 132 நாடுகள் இந்தியாவில் முதலீடு செய்துள்ளன.

ஆண்டுதோறும் அன்னிய முதலீடு இந்தியாவில் அதிகரிப்பது சாதனைகளை ஏற்படுத்தி உள்ளது. கொரோனா காலக்கட்டத்தில் கூட இந்தியாவில் அதிகப்படியான முதலீடு வரப்பெற்றது.

இங்கு முதலீடு செய்தால் லாபம் மற்றும் பாதுகாப்பு உள்ளது என்ற நம்பகத்தன்மை ஏற்பட்டுள்ளது. ஏற்றுமதியிலும் சாதிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. சாலை வசதியில் உலகில் 2-வது இடத்தில் உள்ளது. அடுத்த ஆண்டுக்குள் இந்தியா முதல் இடத்துக்கு வரும்.

வல்லரசு நாடாக..

வணிகர்கள் அனைவரும் நம்மால் முடியும் என நினைத்து உழைத்தால் சாதிக்க முடியும். ஏராளமானவர்கள் தொழில் தொடங்க ரூ.57 ஆயிரம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் தொழில் முனைவோர் பலருக்கு வேலை வழங்கி உள்ளனர். உள்நாட்டு உற்பத்தியில் சீனாவை விட இந்தியா முன்னிலையில் உள்ளது.

பொருளாதார வளர்ச்சியில் 5-வது இடம் வகிக்கிறது. 4-வது இடத்தில் உள்ள ஜெர்மனியை முந்துவதற்கான திட்டங்கள் தீட்டப்படுகிறது. 100-வது சுதந்திர தினத்தையொட்டி இந்தியா உலக நாடுகளை விட முதன்மை வல்லரசு நாடாக திகழும். நாட்டின் வளர்ச்சிக்கு வணிகர்கள் நீங்கள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் மாவட்ட பொதுசெயலாளர் ஜெகன்நாதன், பாபு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ராஜினாமா செய்ய வேண்டும்

பின்னர் பா.ஜ.க. மாநில துணைத்தலைவர் நாராயணன் திருப்பதி நிருபர்களிடம் கூறுகையில், தி.மு.க. ஜனநாயக முறைப்படி செயல்படவிடாமல் தடுக்கிறது. மீண்டும் ஒரு எமர்ஜென்சியை போல் தமிழகத்தை மாற்றுகிறது.

அமைச்சர் செந்தில்பாலாஜி கைது நடவடிக்கை சுப்ரீம்கோர்ட்டு வழிகாட்டுதலின்படி நடந்தது. இதில் பா.ஜ.க.வுக்கு சம்பந்தம் கிடையாது. இந்த கைதுக்காக ஆளுங்கட்சி கூட்டணி தலைவர்கள் எல்லாம் கோவையில் கூட்டம் போட்டு பிரதமரை அவதூறாக பேசியது கண்டிக்கத்தக்கது.

அமைச்சர் பொன்முடி மீது  அவர் செய்த மனுவை ஐகோர்ட்டு தள்ளுபடி செய்து ஊழலுக்கு முகாந்திரம் உள்ளது என கூறியுள்ளது. எனவே பொன்முடி தானாக முன்வந்து ராஜினாமா செய்ய வேண்டும் அல்லது தமிழக அரசு அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும்.

மாநிலத்தில் கருத்து சுந்திரம் பறிக்கப்படுகிறது. சமூக வலைதளங்களில் கருத்துக்களை பதிவிடும் பா.ஜ.க.வினரை, தி.மு.க. அரசு கைது செய்வது கண்டிக்கத்தக்கது என்றார்.

Tags:    

மேலும் செய்திகள்