சுதந்திர தின விழா கோலாகலம்

தளி பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலமாக ெகாண்டாடப்பட்டு வருகிறது.

Update: 2022-08-14 19:05 GMT

தளி பகுதியில் சுதந்திர தின விழா கோலாகலமாக ெகாண்டாடப்பட்டு வருகிறது.

சுதந்திர தின விழா

ஆங்கிலேயர்களின் சர்வாதிகாரம், அடக்குமுறை, அடிமைத்தனம், பிரித்தாலும் கொள்கையில் சிக்கி சீரழிந்து மீள முடியாமல் தவித்து வந்த நமது நாட்டை மீட்டெடுக்க நாடகங்கள், தெருக்கூத்து, பொம்மலாட்டம், வில்லுப்பாட்டு மூலம் சுதந்திர உணர்வை தூண்டியும், இரவு பகலாக இடைவிடாத போராட்டங்கள், உயிர் தியாகங்கள், உடமைகள், உறவினர்களை இழந்து தனி மனிதனாகவும் குழுவாகவும் போராடி ரத்தம் சிந்தி பெற்றதே சுதந்திரம்.

ஒற்றுமை என்ற ஒற்றை சொல்லில் கிளம்பிய கிளர்ச்சியின் மூலம் அடிமைத்தனத்தை அடியோடு வேரறுத்து அடைந்த சுதந்திர காற்றை நினைவு கூறும் நிகழ்வு அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகள் என ஒரு குறுகிய வட்டத்திற்குள் நடைபெற்று வந்தது. ஆனால் இன்னுயிரை இழந்தும் சிறைவாசம் அனுபவித்தும் தன்னலம் கருதாது போராடிய தியாகச் சீலர்களுக்கு நினைவு கூர்ந்து மரியாதை செலுத்தும் வகையில் இந்த ஆண்டு பறந்து விரிந்த பாரதம் முழுவதும் 75-வது சுதந்திர தின விழா நாடு முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

விமரிசையாக கொண்டாட்டம்

அதற்கு முன்னோட்ட நிகழ்ச்சியாக மத்திய அரசின் வேண்டுகோளின் படி நேற்று முன்தினம் முதல் வீடுகள், தொழிற்கூடங்கள், அலுவலகங்களில் தேசிய கொடி ஏற்றப்பட்டு வந்தது. பல்வேறு தரப்பினர்களும் உணர்வுப் பூர்வமாக தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தியும் தியாகிகளின் தியாக உணர்வை நினைவு கூர்ந்தும் வருகின்றனர். அதுமட்டுமின்றி அரசு மற்றும் தன்னார்வ அமைப்புகள் மூலமாக 75-வது சுதந்திர தின விழா விழிப்புணர்வு பேரணி, விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.

அந்த வகையில் உடுமலை ஒன்றியத்திற்கு உட்பட்ட தளி பகுதியில் கடந்த இரண்டு நாட்களாக பொதுமக்கள் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தி சுதந்திர தின விழாவை விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இதனால் பிரதான சாலைகள், கடைகள், அலுவலகங்கள், வீடுகள் என எங்கு நோக்கிலும் நமது மூவர்ணக் கொடி பட்டொளி வீசி கம்பீரமாக பறந்து வருகிறது. இது போன்றதொரு சுதந்திர தின விழாவை இந்த ஆண்டை போல் ஒவ்வொரு ஆண்டும் உணர்வுபூர்வமாக பிரமாண்டத்துடன் சீரோடும் சிறப்பாகவும் கொண்டாட வேண்டும் என்பதே அனைவரின் விருப்பமாகும்.

Tags:    

மேலும் செய்திகள்