நெல்லை வருமானவரித்துறை சார்பில் சுதந்திர தின அமுத பெருவிழா கலைநிகழ்ச்சி முதன்மை ஆணையாளர் சீமாராஜ் தொடங்கி வைத்தார்

நெல்லை வருமானவரித்துறை சார்பில் சுதந்திர தினத்தின் அமுத பெருவிழா கலைநிகழ்ச்சியை முதன்மை ஆணையாளர் சீமாராஜ் தொடங்கி வைத்தார்

Update: 2022-06-11 22:28 GMT

நெல்லை:

நெல்லை வருமானவரித்துறை சார்பில் சுதந்திர தினத்தின் அமுத பெருவிழா கலைநிகழ்ச்சியை முதன்மை ஆணையாளர் சீமாராஜ் தொடங்கி வைத்தார்.

கலை நிகழ்ச்சிகள்

நெல்லை வருமானவரித்துறை சார்பில் 75-வது சுதந்திர தினத்தின் அமுத பெருவிழா கலைநிகழ்ச்சி பாளையங்கோட்டையில் உள்ள ஒரு ஓட்டலில் நேற்று நடந்தது.

மதுரை வருமானவரித்துறை முதன்மை ஆணையாளர் சீமாராஜ் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு கலைநிகழ்ச்சியை தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-

இந்திய சுதந்திர போராட்டம் 1857-ம் ஆண்டு முதல் நடந்து வந்தது. 1947-ம் ஆண்டு நாடு சுதந்திரம் அடைந்தது. அதன்பிறகு இந்தியா பொருளாதாரத்தில், உணவு உற்பத்தியில் தன்னிறைவு பெற்று வளர்ந்து வருகிறது.

நாட்டின் முன்னேற்றத்திற்கு...

இந்தியாவின் சுதந்திரத்திற்கு தமிழ்நாட்டின் பங்கு மிகவும் முக்கியம் வாய்ந்ததாக இருந்தது. தமிழ்நாட்டின் கலாசாரம் மிகவும் தொன்மை வாய்ந்தது. இதனால் தான் வருமானவரித்துறை அலுவலகத்தில் சித்தனவாசல் ஓவியம் வரையப்பட்டுள்ளது.

வருமானவரித்துறையானது அதிக வரியை வசூல் செய்து நாட்டில் பொருளாதார முன்னேற்றத்திற்கும், வளர்ச்சிக்கும் உறுதுணையாக இருந்து வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இதைத்தொடர்ந்து முதன்மை ஆணையாளர் சீமாராஜ், சேம்பர் ஆப் காமர்ஸ் தலைவர் குணசிங் செல்லதுரை, ஆர்யாஸ் குழுமத்தின் தலைவர் பாபு, டாக்டர் அருணாசலம், ஆடிட்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் குத்துவிளக்கேற்றி வைத்தனர். முன்னதாக நெல்லை வருமான வரித்துறை கூடுதல் ஆணையாளர் அருண்பிரசாத் வரவேற்று பேசினார்.

பரதநாட்டியம்

இதைத்தொடர்ந்து பரதநாட்டியம், கரகாட்டம், குதிரை ஆட்டம், பொய்க்கால் ஆட்டம் உள்ளிட்ட நாட்டுப்புற கலைநிகழ்ச்சிகள் நடந்தன. இந்த கலை நிகழ்ச்சிகளை நாகர்கோவில் கவிதாலயா கலைக்கூட மாணவிகள் நடத்தினார்கள்.

விழாவில் தொழில் வர்த்தக சபை உறுப்பினர்கள், ஆடிட்டர்கள், பொறியாளர்கள், வருமானவரித்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் உதவி ஆணையாளர் ரவீந்திரன் நன்றி கூறினார்.

Tags:    

மேலும் செய்திகள்