மணப்பாடு மீனவர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்
திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை விரைவாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
குலசேகரன்பட்டினம்:
திருச்செந்தூர் அருகே மணப்பாட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்கும் பணியை விரைவாக அமைக்க வலியுறுத்தி மீனவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
நாட்டுப்படகு மீன்பிடி தொழில்
திருச்செந்தூர் அருகே மணப்பாடு மீனவ கிராம பகுதியில் கடலின் ஒரு பகுதி ஆர்ப்பரிப்பாகவும், மற்றொரு பகுதி அமைதியாகவும் காட்சியளிக்கும். இந்த கடல் பகுதியில் சுமார் 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பத்தினர் மீன்பிடி மற்றும் அதனைச் சார்ந்த தொழிலை செய்து வருகின்றனர். இங்கு 300-க்கும் மேற்பட்ட நாட்டுப்படகுகள் மூலம் மீன்பிடித் தொழிலில் மீனவர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
மணல் திட்டுகளால் பாதிப்பு
மணப்பாடு கடற்பகுதியில் இயற்கை காலநிலை மாறுபாடு காரணமாக மணல் திட்டுகள் உருவாகியுள்ளன. கடற்கரையிலிருந்து கடல் வரை சுமார் 1 கிலோமீட்டர் தூரம் மணல் திட்டுகள் காணப்படுகின்றன. இதனால் மீனவர்கள் கடலுக்கு படகுகளை கொண்டு செல்லும் போது கடுமையாக பாதிக்கப்பட்டு வருகின்றனர். மணல் திட்டுக்களை கடந்து கடலுக்கு செல்லும் போது நாட்டு படகின் எந்திரம் அடிக்கடி சேதமடைகிறது. இதில் மீனவர்களும் அடிக்கடி காயம் அடைந்து வருகின்றனர்.
இதனால் மணப்பாடு கடற்பகுதியில் தூண்டில் வளைவு பாலம் அமைத்து தரக் கோரி அப்பகுதி மீனவ குடும்பத்தினர் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
வேலைநிறுத்தம்
இந்தநிலையில் ரூ.45 கோடி மதிப்பீட்டில் தூண்டில் வளைவு பாலம் அமைக்க கடந்த ஏப்ரல் மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது. அந்த பணி ஆமை வேகத்தில் நடைபெறுவதாக கூறப்படுகிறது. இதனால் மீனவர்கள் கடலுக்குள் மீன்பிடிக்க செல்லமுடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே விரைவில் இந்த தூண்டில் வளைவு பாலம் பணியை அமைத்து தரக்கோரி இந்தப் பகுதி மீனவர்கள் நேற்று முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன் காரணமாக மீன் பிடி படகுகள் அனைத்தும் கரையோரங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.