அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாடு --தடைச்சட்டம் இருந்தும் பயனில்லை

அதிகரித்து வரும் பாலிதீன் பயன்பாடு-தடைச்சட்டம் இருந்தும் பயனில்லை

Update: 2023-04-20 19:19 GMT

மத்திய, மாநில அரசுகள் பிளாஸ்டிக் பயன்பாட்டை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. கடந்த 2016-ம் ஆண்டு பிளாஸ்டிக் பயன்பாட்டை தடை செய்து மாநில அரசு உத்தரவிட்டது. இதனை தொடர்ந்து அரசுத் துறையினரும் உள்ளாட்சி அமைப்பினரும் நடவடிக்கை எடுக்க தொடங்கினர். ஆனாலும் பிளாஸ்டிக் பயன்பாடு என்பது பெருமளவில் ஊடுருவிவிட்ட நிலையில் அதனை தவிர்ப்பது என்பது பொதுமக்களால் இயலாத காரியமாக உள்ளது. ஆனாலும் அவ்வப்போது அரசு துறை அதிகாரிகள் ஆய்வு நடவடிக்கை மேற்கொண்டு அதனை பறிமுதல் அபராதம் போன்ற பல்வேறு கடுமையான நடவடிக்கை எடுத்தாலும் அது எதிர்பார்த்த பலனை தரவில்லை.

பிளாஸ்டிக் பொருட்கள்

இந்தநிலையில் உள்ளாட்சி அமைப்புகள் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்று பிரித்து பிளாஸ்டிக் பொருட்களை தனியாக பிரித்து எடுக்கும் முயற்சியை மேற்கொண்டு வருகிறது. இருந்தபோதிலும் வணிக ரீதியாக உற்பத்தி மையங்களில் இதனை தடுக்க நடவடிக்கை எடுக்காமல் பயன்பாட்டு மையங்களில் நடவடிக்கை எடுப்பதால் உரிய பலன் கிடைக்காத நிலையே நீடிக்கிறது. அரசுத்துறை உற்பத்தி மையங்களில் இம்மாதிரியான தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை உற்பத்தி செய்வதை தடுக்க நடவடிக்கை எடுத்தாக வேண்டும் பல்வேறு காரணங்களால் அந்த நடவடிக்கை எடுக்க தயங்கும் நிலையே உள்ளது.

எனினும் அரசு துறை அதிகாரிகளும் உள்ளாட்சி அமைப்பு அலுவலர்களும் தொடர்ந்து நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்து வந்தாலும் பயன்படுத்துவோர் எண்ணிக்கையும் குறைந்தபாடில்லை.

அபராதம்

இதுபற்றி உள்ளாட்சி அமைப்பு அதிகாரி ஒருவரிடம் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, பிளாஸ்டிக் தடை சட்டம் அமலுக்கு வந்தவுடன் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்தக் கூடாது என்று பல்வேறு வணிக நிறுவனங்களில் எச்சரிக்கை விடுத்தும், அபராதம் விதித்தும் நடவடிக்கை எடுத்து வருகிறோம், விருதுநகர் நகராட்சி பகுதியில் மட்டும் கடந்த 3 வருடங்களில் ரூ.6 லட்சம் வரை அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

இதைதொடர்ந்து திடீர் சோதனைகள் நடத்தப்பட்டு பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்பவர் மீதும் பயன்படுத்துவோர் மீதும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இருந்தபோதிலும் அது முற்றிலுமாக ஒழிக்கப்பட்டு விட்டதாக உறுதியாக கூற இயலாது.

குறைய வாய்ப்பில்லை

பாலகிருஷ்ண சாமி(முன்னாள் நகராட்சி துணைத்தலைவர் விருதுநகர்):

பாலிதீன் பொருட்கள் கேடு விளைவிப்பது என்று அரசு பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கை மேற்கொண்டாலும் அதன் பயன்பாடு அடித்தட்டு மக்களிடமிருந்து மேல்தட்டு மக்கள் வரை ஊடுருவி விட்ட நிலையில் அதனை தவிர்ப்பது என்பது இயலாத காரியமாகும். அதனை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும் என்றால் அதற்கு மாற்றுப்பொருள் பயன்பாட்டிற்கு வர வேண்டும். மக்கும் பிளாஸ்டிக் பொருளாக மக்காச்சோளத்தில் இருந்து தயாரிக்கப்படும் ஒரு பிளாஸ்டிக் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால் அதன் விலை சாதாரண பிளாஸ்டிக் பொருளின் விலையை விட 3 மடங்கு அதிகம் உள்ளதால் அதன் பயன்பாடு குறைந்து விட்டது. எனினும் அரசு பிளாஸ்டிக் பொருளின் பயன்பாட்டை முற்றிலுமாக தடுக்க நடவடிக்கை எடுத்தாலும் அதே வேளையில் மாற்றுப்பொருளாக மஞ்சள் பையை பயன்படுத்தி கொள்ள அறிவுறுத்தினாலும் அது முற்றிலுமாக பயன்பாட்டிற்கு வரவில்லை. எனவே பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு இணையாக மற்றொரு மாற்று பொருளை அரசு கண்டறிந்து அதனை ஊக்குவிக்க வேண்டும் அதுவரை பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு என்பது குறைய வாய்ப்பில்லை.

ராஜபாளையத்தை சேர்ந்த சுகாதார ஆய்வாளர் காளி:

பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்க உணவு பாதுகாப்புத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக உணவு பாதுகாப்புத்துறையின் மூலம் பல இடங்களில் ஆய்வுகள் நடத்தப்பட்டது. அதில் பாலித்தீன் பயன்படுத்திய கடைகளுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் எப்போதும் பயன்படுத்தக்கூடாது என்பதை தொடர்ச்சியாக வலியுறுத்தி வருகிறோம். அரசு அறிவுறுத்தி உள்ள மைக்ரான் அளவுள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுகிறதா? என்பது குறித்தும் சோதனை செய்கிறோம். அபராதம் விதித்த கடைகளில் மீண்டும், மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்துவது தெரியவந்தால் அந்த கடைகளின் அனுமதி ரத்து செய்யப்படும்.

அவசியமாகும்

வடிவேல்(கட்டுமான என்ஜினீயர் விருதுநகர்):

சுற்றுச்சூழல் பாதுகாப்பு பொதுமக்களின் நலன் கால்நடைகளின் பாதுகாப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு மத்திய மாநில அரசுகள் பாலிதீன் பயன்பாட்டிற்கு தடைவிதித்தாலும் அது பொதுமக்களால் உரிய முறையில் பின்பற்றப்படாத நிலையே நீடிக்கிறது. அரசு அலுவலர்கள் ஒருமுறை பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் விதிமுறைகளுக்கு முரணான பிளாஸ்டிக் பயன்பாடு ஆகியவற்றின் மீது நடவடிக்கை எடுத்து வரும் நிலையில் இதன் மூலமாக பொருட்களின் உற்பத்தி மையங்களுக்கு சென்று நடவடிக்கை எடுக்காத நிலை நீடிக்கிறது. அதற்கான காரணம் பொதுமக்களாகிய எங்களுக்கு தெரியவில்லை. ஆனாலும் இதற்கான நடவடிக்கைகளை எடுத்தாக வேண்டும் அவ்வாறான உற்பத்தி மையங்களின் பின்புலம் என்ன என்பதை கண்டறிந்து உற்பத்தி நிலையிலேயே இதற்கு தடை விதிக்க வேண்டியது அவசியமாகும்.

விழிப்புணர்வு தேவை

ஸ்ரீவில்லிபுத்துறை சேர்ந்த ஓய்வு பெற்ற அதிகாரி ராஜேந்திரன் கூறியதாவது:

சமீப காலமாக பாலிதீன் பைகள் புழக்கம் அதிகரித்து உள்ளது. மீண்டும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மலைப்பகுதிகளுக்குள் சுற்றுலா செல்லும் பயணிகள் பாலத்தின் பைகளை கொண்டு செல்லக்கூடாது. ஏனென்றால் பல உயிரினங்கள் உயிரிழப்புக்கு காரணமாக இருக்கிறது. எனவே தொடர்ந்து பாலித்தீன் பைகள் பயன்பாட்டை நிறுத்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

சுகாதார சீர்கேடு

செல்வி(தலைவர் கூரைக்குண்டு பஞ்சாயத்து):

பாலிதீன் பொருட்கள் பயன்பாட்டால் அவை நிலத்தில் புதைந்து நிலத்தடி நீர் பாதிக்கப்படுவதுடன் விவசாய நிலங்களும் பாதிக்கப்படுகிறது. மேலும் கால்நடைகள் பிளாஸ்டிக் பொருட்களை உண்பதால் அவை உயிரிழக்கும் நிலையும் ஏற்படுகிறது. மேலும் கழிவு நீர் கால்வாயில் பிளாஸ்டிக் பொருட்கள் போடப்படுவதால் அடைப்பு ஏற்பட்டு சுகாதார சீர்கேடு ஏற்படுகிறது. எனவே மக்கள் விழிப்புணர்வுடன் அரசு அறிவுறுத்தியபடி பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாட்டை தவிர்க்க வேண்டும்.

உள்ளாட்சி அமைப்பினரும் இதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது அவசியமாகும். மொத்தத்தில் சுற்றுச்சூழலை பாதுகாக்க நிலத்தடி நீரை பாதுகாக்க பிளாஸ்டிக் பொருள் பயன்பாடு தவிர்க்கப்பட வேண்டும். இதை நடைமுறைப்படுத்துவது என்பது சிரமமான காரியமாகவே உள்ளது. மக்கள்தான் தாங்களாகவே இதற்கு முன்வர வேண்டியது அவசியம்.

Tags:    

மேலும் செய்திகள்