பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிப்பு
குமரியில் குளு, குளு சீசனுடன் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
குலசேகரம்:
குமரியில் குளு, குளு சீசனுடன் சாரல் மழை பெய்தது. பேச்சிப்பாறை அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால் திற்பரப்பு அருவியில் வெள்ளப்பெருக்கு நீடிக்கிறது.
குளு, குளு சீசன்
குமரி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக குளு, குளு சீசன் நிலவி வருகிறது. பகல் நேரத்தில் வெயிலையே காண முடியவில்லை. அதிகாலையில் பனிப்பொழிவும் மற்றும் இரவு நேரத்தில் கடும் குளிராகவும் சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
மலை பகுதிகளில் நேற்று சாரல் மழை பெய்தது. இதனால் அணைகளுக்கு நீர் வரத்து அதிகரித்தது.
பேச்சிப்பாறை அணையின் நீர்மட்டம் 46 அடியை நெருங்கிய நிலையில் கடந்த திங்கட்கிழமை முதல் அணையில் இருந்து வினாடிக்கு ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் மழை தணிந்திருந்த நிலையில் அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி தண்ணீரின் அளவு வினாடிக்கு 350 கன அடியாக குறைக்கப்பட்டது.
அருவியில் வெள்ளப்பெருக்கு
இந்தநிலையில் நேற்று மீண்டும் மழை பெய்ததால் பேச்சிப்பாறை அணையில் இருந்து வெளியேற்றப்படும் உபரி தண்ணீர் மீண்டும் வினாடிக்கு 1000 கன அடியாக அதிகரிக்கப்பட்டது.
இதனால் திற்பரப்பு அருவியில் 5-வது நாளாக நேற்றும் வெள்ளப்பெருக்கு நீடித்தது. எனவே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படவில்லை. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.