மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-08-08 13:59 GMT

மேட்டூர்,

மேட்டூர் அணை கடந்த மாதம் 16-ந் தேதி தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டியது. அன்று முதல் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதன் காரணமாக அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாகவே நீடித்து வருகிறது. இதனிடையே கடந்த சில நாட்களுக்கு முன்பு கேரளா, கர்நாடகா மற்றும் தமிழகத்தின் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை கொட்டி தீர்த்தது. இதனால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்தது.

அதன்படி கடந்த 3 நாட்களுக்கு முன்பு அணைக்கு வினாடிக்கு 2 லட்சம் கனஅடி தண்ணீர் வந்தது. இந்த தண்ணீர் 16 கண் மதகு மற்றும் அணையை ஒட்டியுள்ள நீர்மின் நிலையம் வழியாக காவிரி ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டது. இதனால் ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனையடுத்து காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைய தொடங்கி நிலையில் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்தது.

நேற்று காலை நிலவரப்படி மேட்டூர் அணையின் நீர்மட்டம் 120.05 அடியாக இருந்தது. அணைக்கு 1,15,000 கன அடி நீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 1.20 லட்சம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.

இந்த நிலையில், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரித்து வருவதால் அணையில் இருந்து திறக்கப்படும் உபரிநீரின் அளவானது அதிகரிக்கப்பட்டுள்ளது. தற்போது அணையில் இருந்து 1.45 லட்சம் கன அடி நீர் உபரிநீராக வெளியேற்றப்பட்டு வருகிறது. இதனால் ஆற்றங்கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்