முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரிப்பு
தொடர்ந்து பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியது. முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கூடலூர்,
தொடர்ந்து பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பியது. முதுமலையில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கடும் வறட்சி
நீலகிரி மாவட்டம் கூடலூர், முதுமலை, மசினகுடி சுற்றுவட்டார பகுதிகளில் கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. இதனால் கடும் வறட்சி நிலவியது. தொடர்ந்து பல இடங்களில் காட்டுத்தீ ஏற்பட்டது. இதன் காரணமாக காட்டு யானைகள், மான்கள், காட்டெருமைகள் உள்ளிட்ட வனவிலங்குகளுக்கு பசுந்தீவன தட்டுப்பாடு ஏற்பட்டது.
இதனால் அவை உணவு தேடி கிராமங்களுக்குள் புகுந்து, அங்கு பயிரிட்டுள்ள பயிர்களை தின்று சேதப்படுத்தி வந்தன. தொடர்ந்து வனவிலங்கு-மனித மோதல் நிகழும் அபாயம் இருந்தது. இதேபோல் முதுமலைக்கு வரும் சுற்றுலா பயணிகள், இடம் பெயர்ந்த வனவிலங்குகளை பார்க்க முடியாமல் ஏமாற்றம் அடைந்தனர்.
பசுமை திரும்பியது
இந்தநிலையில் கடந்த 2 வாரங்களாக நீலகிரி மாவட்டத்தில் தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் வறட்சியால் களை இழந்து காணப்பட்ட வனப்பகுதிகள் பசுமைக்கு திரும்பி உள்ளது. கூடலூர், முதுமலை, மசினகுடி வனப்பகுதி பசுமையாக காணப்படுவதால், சிறு உயிரினங்கள் தொடங்கி வனவிலங்குகள் வரை வாழ்வதற்கான ஏற்ற காலநிலை திரும்பி இருக்கிறது.
இதனால் முதுமலையில் மயில்கள், புள்ளி மான்கள், காட்டு யானைகள், அரிய வகை நீலகிரி லங்கூர் குரங்குகள் என வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது. தற்போது சீசன் தொடங்கி உள்ளதால் சுற்றுலா பயணிகள் வனவிலங்குகளை கண்டு ரசித்து செல்கின்றனர். இருப்பினும், வனவிலங்குகளை தொந்தரவு செய்யக்கூடாது. உத்தரவை மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் சுற்றுலா பயணிகளுக்கு அறிவுரை வழங்கி வருகின்றனர்.
இதுகுறித்து வனத்துறையினர் கூறும் போது, கடந்த மார்ச் மாதம் வறட்சியால் நூறு ஏக்கர் பரப்பளவு காட்டுத்தீயால் எரிந்து நாசமானது. தற்போது மாலை நேரத்தில் பரவலாக மழை பெய்வதால் வனப்பகுதி பசுமைக்கு திரும்பி உள்ளது. இதனால் காட்டுத்தீ ஏற்பட வாய்ப்பு இல்லை என்றனர்.