மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாக அதிகரித்துள்ளது.
மேட்டூர்,
கர்நாடக மாநிலத்தில் பருவமழை தீவிரம் அடைந்ததன் எதிரொலியாக அங்குள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளில் இருந்து கடந்த மாதம் முதல் வாரத்தில் காவிரி ஆற்றில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. இந்த தண்ணீர் மேட்டூர் அணையை வந்தடைந்ததன் காரணமாக கடந்த மாதம் 16-ந் தேதி அணை தனது முழு கொள்ளளவான 120 அடியை எட்டி நிரம்பியது.
அன்று முதல் நேற்று வரை அணை நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது. இந்த நிலையில் அணைக்கு வரும் நீர்வரத்து அப்படியே வெளியேற்றப்பட்டு வருகிறது.
தண்ணீர் மீண்டும் திறப்பு
வினாடிக்கு 23 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் அதிகரித்து வந்தபோது, அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் வெளியேற்றப்பட்டது. இதன் அடிப்படையில் கடந்த 25-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கன அடிக்கு கீழ் குறைந்ததால் 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறப்பது நிறுத்தப்பட்டது.
கடந்த 31-ந் தேதி அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடிக்கு மேல் அதிகரித்தது. இதனால் 31-ந் தேதி காலை முதல் அணையின் உபரிநீர் போக்கியான 16 கண் மதகுகள் வழியாக தண்ணீர் திறந்து விடப்பட்டு வருகிறது.
1.20 லட்சம் கனஅடி நீர்
இந்த நிலையில் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது. நேற்று காலை அணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 42 ஆயிரம் கனஅடியாக இருந்தது. மாலையில் வினாடிக்கு 76 ஆயிரம் கனஅடியாகவும், இரவு 8 மணி அளவில் வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடியாகவும் நீர்வரத்து அதிகரித்தது. இதனால் 16 கண் மதகுகள் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரின் அளவு படிப்படியாக அதிகரித்துக் கொண்டே வருகிறது.
நேற்று இரவு நிலவரப்படி 16 கண் மதகுகள் வழியாக வினாடிக்கு 97 ஆயிரம் கன அடிக்கு மேல் தண்ணீர் திறந்து விடப்பட்டது. நீர்மின்நிலையங்கள் வழியாக வினாடிக்கு 23 ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது.
வெள்ள அபாய எச்சரிக்கை
வினாடிக்கு 1.20 லட்சம் கனஅடி நீர் காவிரி ஆற்றில் திறக்கப்பட்டுள்ளதால் ஆற்றின் இருகரைகளையும் தொட்டபடி தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. அணைக்கு நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் பட்சத்தில், 16 கண் மதகுகள் வழியாக திறக்கப்படும் தண்ணீரின் அளவு மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.
இதையொட்டி காவிரி கரையோரங்களில் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளதுடன், வருவாய்த்துறையினர் தீவிர கண்காணிப்பிலும் ஈடுபட்டு வருகின்றனர்.