ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 10 ஆயிரம் கனஅடியாக அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.

Update: 2022-07-10 16:10 GMT

பென்னாகரம்:

கர்நாடக அணைகளில் இருந்து உபரிநீர் திறந்து விடப்பட்டுள்ளதால் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்துள்ளது. இதனால் அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் தடை விதித்துள்ளார்.

கனமழை

கர்நாடக மற்றும் கேரள மாநில பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜ சாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகின்றன. இந்த அணைகளின் பாதுகாப்பு கருதி உபரிநீர் காவிரி ஆற்றில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டுள்ளது.

அதன்படி கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து வினாடிக்கு 26 ஆயிரத்து 143 கன அடி தண்ணீரும், கபினி அணையில் இருந்து வினாடிக்கு 25 ஆயிரம் கனஅடி தண்ணீரும் என மொத்தம் வினாடிக்கு 51 ஆயிரத்து 143 கனஅடி தண்ணீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. இதனிடையே நேற்று முன்தினம் தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 6 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது.

நீர்வரத்து அதிகரிப்பு

கர்நாடக அணைகளில் இருந்து திறந்து விடப்பட்ட உபரிநீர் நேற்று மதியம் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லை வந்தடைந்தது. இதனால் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க தொடங்கியது. நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 10 ஆயிரம் கனஅடியாக அதிகரித்தது.

இந்த நீர்வரத்தை பிலிகுண்டுலுவில் உள்ள மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். இந்த நீர்வரத்து மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ் உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.

குளிக்கவும், பரிசல் இயக்கவும் தடை

காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி அருவியில் குளிக்கவும், பரிசல் இயக்கவும் மாவட்ட கலெக்டர் சாந்தி தடை விதித்துள்ளார். இதன் காரணமாக ஒகேனக்கல்லுக்கு வந்த சுற்றுலா பயணிகளை மடம் சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திருப்பி அனுப்பினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டதால் நடைபாதைக்கு செல்லும் நுழைவுவாயில் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது. மேலும் காவிரி கரையோரம் பரிசல்கள் கவிழ்த்து போடப்பட்டுள்ளன.

Tags:    

மேலும் செய்திகள்