மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில்கடலூர் துறைமுகத்திற்கு சூரை மீன் வரத்து அதிகரிப்பு
மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ள நிலையில் கடலூர் துறைமுகத்திற்கு சூரை மீன் வரத்து அதிகரித்துள்ளது.
கடலூர் முதுநகர்,
கடலூர் துறைமுகத்தில் இருந்து தினந்தோறும் சிங்காரத்தோப்பு, தேவனாம்பட்டினம், அக்கரைகோரி, சோனங்குப்பம், ராசாபேட்டை, சொத்திகுப்பம், சித்திரப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரத்துக்கும் அதிகமான மீனவர்கள், நூற்றுக்கும் மேற்பட்ட விசை மற்றும் பைபர் படங்களில் ஆழ் கடலுக்கு சென்று மீன்பிடித்து வந்து விற்பனை செய்வது வழக்கம். இந்த நிலையில் கடலில் மீன்கள் இனப்பெருக்கத்துக்காக கடந்த 15-ந்தேதி முதல் ஜூன் 14-ந் தேதி வரை 61 நாட்கள் மீன்பிடித்தடை காலம் அமுலில் இருந்து வருகிறது. இதனால் விசைப்படகுகள் மீன்பிடிக்க செல்லவில்லை. சிறிய ரக பைபர் படகுகள் 5 நாட்டிங்கல் தூரம் வரை சென்று மீன்பிடித்து வர அனுமதிக்கப்படுகிறது.
அந்த வகையில் நேற்று கடலூர் துறைமுகத்திலிருந்து பைபர் படகுகளில் கடலுக்கு சென்ற மீனவர்களுக்கு, சூரை வகை மீன்கள் அதிக அளவில் சிக்கின. மற்ற மீன்கள் மிகவும் குறைந்த அளவிலேயே மீனவர்களின் வலைகளில் சிக்கின. சூரை மீன்களின் அளவைப் பொறுத்து கிலோ ஒன்று ரூ.60 முதல் ரூ.100 வரை விலை போனது. இதனை வியாபாரிகள் போட்டி, போட்டு வாங்கி கேரளா போன்ற வெளி மாநிலங்களுக்கு, லாரிகள் மூலம் அனுப்பினர். கடந்த சில நாட்களாக சூரை மீன் வரத்து கடலூர் துறைமுகத்திற்கு அதிகரித்துள்ளதாக மீனவர் ஒருவர் தெரிவித்தார்.